ராஜஸ்தான் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக் கூட்டம்: சச்சின் பைலட் புறக்கணிப்பு!

SACHIN PILOT
SACHIN PILOT

ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்வர் அசோக் கெலோட் கலந்துகொண்ட போதிலும், முன்னாள் துணை முதல்வரான சச்சின்பைலட் இதில் பங்கேற்கவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் நவம்பர் 25 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த கூட்டம் நடந்து முடிந்தபின் பேசிய கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் நல்லாட்சி நிர்வாகத்தை தந்துள்ளதால் ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தார். ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநில தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைமை தனித்தனியாக கூட்டங்கள் நடத்திய போதிலும், ராகுல்காந்தி, ராஜஸ்தான் மாநில தேர்தல் குழு கூட்டத்தில் மட்டும் பங்கேற்றார். தெலங்கானாவுக்கு செல்லவேண்டி இருந்ததால் ராகுல், மத்தியப் பிரதேச மாநில தேர்தல் குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

Rajasthan Congress
Rajasthan Congress

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் குழு கூட்டத்தில் முதல்வர் அசோக் கெலோட், மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தாவா, மாநிலத் தலைவர் கோவிந்த் டோடாஸ்ரா, பொதுச் செயலர் மற்றும் கட்சியின் அமைப்புச் செயலர் கே.சி.வேணுகோபால், மாநில தேர்தல் குழு தலைவர் கெளரவ் கோகோய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநிலத்தில் காங்கிரஸ் நல்லாட்சி நடத்தியதால், சேமிப்பு, நிவாரணம், வளர்ச்சி, பாதுகாப்பு, மக்கள் மேம்பாடு ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக  கார்கே, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள  செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ராஜஸ்தான் மக்கள் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியையே தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும்  மீஜோரம் மாநிலங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ள போதிலும், ராஜஸ்தானில் இன்னமும் முதல் பட்டியல் வெளியிடப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் அசோக் கெலோட் மற்றும் சச்சின் பைலட்டுக்கு இடையே இருந்து வரும் கோஷ்டி மோதலே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

கெலோட்-பைலட் இருவருக்கும் இடையில் நீண்டநாள்களாக இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் சமீபத்தில் கட்சித் தலைமை தலையீட்டின் பேரில் தீர்த்துவைக்கப்பட்டது.கடந்த 2020 ஆம் ஆண்டு சச்சின் பைலட், தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் கெலோட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் எதிர்ப்பு அலை காரணமாக தற்போது பதவியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படமாட்டாது என்று தெரிகிறது. தேர்தலில் வெற்றிவாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அசோக் கெலோட் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com