
“எப்போது நான் பெங்களூருவுக்கு வருவேன் என்று தெரியாததால், என்னை வரவேற்க விமான நிலையம் வர வேண்டாமென்று கர்நாடக முதல்வர் மற்றும் மாநில ஆளுநரிடம் கேட்டுக்கொண்டதாக” என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 லேண்டரை மென்மையாக தரையிறக்கி அத்திட்டத்தின் வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டில் இருந்து நேரடியாக சனிக்கிழமை காலை பெங்களூரு வந்தார்.
மரபுப் படி பிரதமரை வரவேற்பதற்காக மாநில முதல்வர் சித்தராமைய்யாவோ, துணை முதல்வர் சிவகுமாரோ விமான நிலையத்திற்கு வரவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பெங்களூரு வந்த பிரதமரை விமான நிலையம் சென்று வரவேற்க தடை விதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸின் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " பிரதமருக்கு முன்பாக இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது பிரதமர் எரிச்சலடைந்துள்ளார். அதனால் மரபுகளையும் மீறி விமான நிலையம் வந்து வரவேற்க முதல்வருக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது அற்பத்தனமான அரசியலே தவிர வேறொன்றுமில்லை.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில், கடந்த 2008 அக்.22-ஆம் தேதி சந்திரயான் 1 திட்டம் வெற்றியடைந்தபோது, அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி, ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துக்குச் சென்று விஞ்ஞானிகளைப் பாராட்டியதை இன்றைய பிரதமர் மோடி மறந்து விட்டார் போலும்! என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பெங்களூரு விமான நிலையத்தின் முன்பு கூடியிருந்த மக்கள் முன்னால் சனிக்கிழமை உரையாற்றிய பிரதமர் மோடி, “விஞ்ஞானிகளை சந்தித்துவிட்டு செல்ல இருப்பதால் என்னை வரவேற்க விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என்று முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆளுநரிடம் என்று கேட்டுக்கொண்டேன். நான் எப்போது பெங்களூரு வந்தடைவேன் என்று எனக்குத் தெரியாது என்பதால் மரபுகளைத் தவிர்க்குமாறு கூறினேன்" என்று தெரிவித்தார்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில், இந்த விவகாரம் குறித்து கர்நாடக மாநில துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், "நானோ அல்லது முதல்வரோ எந்த நேரத்திலும் சென்று அவரை (பிரதமர்) வரவேற்க தயாராக இருந்தோம். ஆனால், பிரதமரின் அலுவலகத்தில் இருந்து அதிகாரபூர்வ தகவல் வந்ததால் அதனை மதிக்க விரும்பினோம். வேறெந்த அரசியலும் இதில் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.