குடியரசுதின விழா சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

PM Modi and Joe Biden
PM Modi and Joe Biden

2024 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசுதின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜி-20 நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க புதுதில்லி வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் குறித்து தனியாக விவாதித்தார். அப்போது இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்தார்.

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஜோ பைடன் புதுதில்லி வரும்போது குவாட் உச்சிமாநாடு நடத்தும் திட்டம் உள்ளதா என்று கேட்டதற்கு, அதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று கார்செட்டி கூறினார். குவாட் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு, வருடாந்திர குவாட் உச்சிமாநாட்டை இந்தியா நடத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய குடியரசு தின விழாவின் போது குவாட் அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று தகவல்கள் உலாவுகின்றனவே என்று கேட்டதற்கு, அது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது மட்டும் தெரியும் என்றார் அமெரிக்க தூதர் எரிக் காரி செட்டி.

இந்த ஆண்டு குடியரசுதின விழாவின் போது எகிப்து அதிபர் அப்தெல் பஃதா எல் சிஸ்ஸி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசுதின கொண்டாட்டத்தின் போது உலக தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்து வருகிறது. கோவிட் தொற்று காரணமாக கடந்த 2021 மற்றும் 2022 இல் குடியரசு தின விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டில் அப்போது பிரேஸில் நாட்டு அதிபராக இருந்த ஜயிர் போல்ஸோனாரோ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். 2019 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போஸா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 2018 ஆம் ஆண்டில் ஆசியான் அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

2017 ஆம் ஆண்டில் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். 2016 ஆம் ஆண்டு பிரெஞ்சு அதிபர் பிராங்கோஸ் ஹொலந்தே பங்கேற்று கெளரவித்தார். 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கலந்துகொண்டு சிறப்பித்தார். 2014 ஆம் ஆண்டில் அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயும், 2013 ஆம் ஆண்டில் பூடான் மன்னர் ஜிக்மே கேஸர் நாம்கியா வாங்சுக்கும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகோலாஸ் சர்கோஸி, விளாடிமிர் புதின், நெல்சன் மண்டேலா, ஜான் மேஜர், முகமது கடாமி, ஜாக்கி சிராக் உள்ளிட்ட தலைவர்களும் குடியரசு தினவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com