பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு..!
2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்கவுள்ளதால் பொதுமக்கள் தயாராக இருக்குமாறு ரயில்வே துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து பல்வேறு மக்கள் படிப்புக்காகவோ, வேலைக்காகவோ வெளியூர்களில் தங்கி வருகின்றனர். இவர்கள் அனைவரும் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு சென்று வருவர். அப்படி வருபவர்கள் ரயிலில் பயணம் செய்யவே அதிகம் விரும்புவர், உடல் அலைச்சலை கொடுக்காததாலும், அதிக சௌகரியத்தை கொடுப்பதாலும் பலரும் ரயில் பயணத்தையே விரும்புவர்.
அப்படி அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு நற்செய்தி வந்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை (செப்டம்பர் 13) தொடங்குகிறது. ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 11 (வியாழக்கிழமை) செல்ல நினைப்பவர்கள் நாளை (செப்டம்பர் 13) முன்பதிவு செய்யலாம்.
ஜனவரி 12 (வெள்ளிக்கிழமை) செல்ல நினைப்பவர்கள் நாளை மறுநாள் (செப்டம்பர் 14) முன்பதிவு செய்யலாம்
ஜனவரி 13 (சனிக்கிழமை) செல்ல நினைப்பவர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
ஜனவரி 14 (ஞாயிற்றுக்கிழமை) பயணம் மேற்கொள்பவர்கள் செப்டம்பர் 16 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சிரமமின்றி, கடைசி நேர சிக்கலை தவிர்க்க தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.