பதவி கேட்கவில்லை… ஆனா ஓரங்கட்டுகிறார்கள்: பா.ஜ.க. பங்கஜ் முண்டே வேதனை!

பங்கஜ் முண்டே
பங்கஜ் முண்டே

நான் பதவிக்கு ஆசைப்படவும் இல்லை. பதவியும் கேட்கவில்லை. ஆனாலும் பா.ஜ.க. மேலிடம் என்னை ஓரங்கட்டி வருகிறது என்று வேதனையுடன் குறிப்பிட்டார் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர்களில் ஒருவரான பங்கஜ் முண்டே.

சமீபத்தில் பீட் மாவட்டத்தில் பங்கஜ் முண்டேவுக்கு சொந்தமான  சர்க்கரை ஆலையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நான் பா.ஜ.க.வுடன் நெருக்கமான உறவுடன், கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டு இருக்கவே விரும்புகிறேன். கட்சியின் தலைமை எதிர்பார்க்கும் விதத்திலேயே செயல்பட்டு வருகிறேன். ஆனாலும் என்னை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்கள். என்னை தொடர்ந்து ஓரங்கட்ட பார்க்கிறார்கள்.

நான் கட்சியை விமர்சித்து எந்த கருத்தும் சொன்னதில்லை. எனினும் சிலர், நான் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். மேலும் வேறு அரசியல் கட்சியில் சேர இருப்பதாகவும் வதந்தியை பரப்பி வருகின்றனர். இது உண்மையல்ல என்றார் பங்கஜ் முண்டே.

2019 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் பார்லி தொகுதியில் போட்டியிட்ட பங்கஜ் முண்டோ தோல்வியைத் தழுவினார். அவரது உறவினர் தனஞ்செய் முண்டே தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு பங்கஜ் முண்டேயை வெற்றி கண்டார். இதையடுத்து கட்சிக்கு தேசிய அளவில் பணியாற்ற பங்கஜ் முண்டே விருப்பம் தெரிவித்திருந்தார்.

பா.ஜ.க. மேலிடம் ஜூன் மாதம் என்னை மத்தியப் பிரதேச மாநில இணை பொறுப்பாளராக நியமித்தபோது மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியையும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சென்றேன்.

எனினும் தனிப்பட்ட முறையில் இரண்டு மாதங்கள் அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டபின் கட்சி மேலிடம் என்னை அணுகுவதே இல்லை. எனக்கு எந்த பணியும் கொடுக்கப்படுவதில்லை. அப்படி ஒருபோதும் இருந்ததில்லை.

2019 தேர்தலில் நான் போட்டியிட்ட போதிலும் பா.ஜ.க.வுக்காக தீவிர பிரசாரம் செய்தேன். நான் தோல்வி அடைந்தாலும், கட்சிக்காக தீவிர பிரசாரம் செய்ததை மேலிடம் கண்டுகொள்ளவே இல்லை.

மாநில சட்ட மேலவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் நேரங்களில் என்னிடம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருமாறு மேலிடத்திலிருந்து செய்தி வரும். ஆனால், கடைசி நிமிடத்தில் போட்டியிடுவதிலிருந்து விலகி விடுங்கள் என்று கூறிவிடுவார்கள் என்று வேதனையுடன் குறிப்பிட்டார் பங்கஜ் முண்டே.

சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் தலைமையில் ஒரு பிரிவினர் சிவேசனை-பா.ஜ.க. அரசில் இணைந்தார்கள். தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். ஆனாலும் கட்சியின் தேசிய செயலாளர் என்ற முறையில் இது குறித்து யாரும் என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை.

வரும் தேர்தலில் பீட் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு. அங்கு ஏற்கெனவே எனது சகோதரி பீரிதம் முண்டே எம்.பி.யாக இருக்கிறார். அவருக்கு பதிலாக நான் போட்டியிடும் எண்ணம் எதுவும் இல்லை என்றார் பங்கஜ் முண்டே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com