‘பாரத்‘ பெயர் சர்ச்சை: அரசியல் கட்சி தலைவர்கள் சொன்னது என்ன? அடுத்து நடக்கபோவது என்ன?

‘பாரத்‘ பெயர் சர்ச்சை: அரசியல் கட்சி தலைவர்கள் சொன்னது என்ன? அடுத்து நடக்கபோவது என்ன?

ஜி-20 நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் சார்பில் அனுப்ப்ப்பட்டுள்ள அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் (President of Bharat) என்று குறிப்பிடப்பட்டுள்ளது அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜி-20 நாடுகள் அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இதையொட்டி புதுதில்லியில் உச்சிமாநாடு வருகிற 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளL. இதில் அந்த அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு இரவு விருந்து அளிப்பதற்கான அழைப்பிதழ் குடியரசுத் தலைவர் சார்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ள செய்தியில், அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது உண்மைதான். அரசியல் சாசனத்தின் 1-வது பிரிவில் பாரத் அதாவது இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது மாநிலங்களின் ஒன்றியம் என்பது கூட தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், அரசியல் சாசனப்படி இந்தியாவை பாரத் என அழைக்க ஆட்சேபம் இல்லை. ஆனாலும் பெரும் மதிப்புகொண்ட இந்தியா என்ற பெயரை கைவிடும் முட்டாள்தளமான முடிவை மத்திய அரசு எடுக்காது என்று நம்புவதாக கூறியுள்ளார்.

இதனிடையே தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், “நாங்கள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளதால்தான் மத்திய அரசு இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்த நாடு 140 கோடி மக்களுக்கு சொந்தமானது. ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமல்ல. இந்தியா கூட்டணியின் பெயரை நாங்கள் பாரத் என மாற்றினால், அந்த பெயரையும் மாற்றுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான மம்தா கூறுகையில், வரலாற்றை மாற்றி எழுத மோடி அரசு முயற்சிக்கிறது. ஆங்கிலத்தில் இந்தியா என்பதை ஹிந்தியில் பாரத் என்று கூறுவார்கள். இதில் புதிதாக என்ன இருக்கிறது? அவசரம் அவசரமாக பெயர் மாற்றவேண்டிய அவசியம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். இது குறித்து முடிவு எடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டியதிலிருந்தே பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்து வருகிறது. வளர்ச்சி மிகு இந்தியாவை உருவாக்கும்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துள்ள பிரதமர் மோடியால் 9 ஆண்டுகளில் பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்துள்ளது. இந்தியா என்ற சொல்லே தேர்தலில் பா.ஜ.க.வை விரட்டும் என்று தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது எக்ஸ் தளத்தில் நாட்டை பெருமைப்படுத்தும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காங்கிரஸ் எதிர்ப்பது ஏன் என்று தெரியவில்லை. பாரத் ஜடோ யாத்திரை நடத்தியவர்கள். பாரத் மாதாவுக்கு ஜே என்ற கோஷத்தை மட்டும் வெறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத் மாநிலம், ஆனந்த் தொகுதி உறுப்பினரான மிதேஷ் படேல் என்பவர் மக்களவையில் பேசுகையில், இந்தியா என்பது கிழக்கிந்திய கம்பெனி வைத்த பெயர். இது அடிமைத்தனத்தை குறிப்பதாக உள்ளது. இதை பாரத் என மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறும்போது, எதற்கெடுத்தாலும் காங்கிரஸ் கட்சியினர் பிரச்னை செய்கின்றனர். நான் பாரத்வாசி. எனது நாட்டின் பெயர் பாரத். அது எப்போதும் பாரத் என்பதாகவே இருக்கும். இதில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்னை என்றால் அதற்கு அவர்களே ஒரு தீர்வுகாணட்டும் என்றார்.

இதனிடையே நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா இல்லத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

மேலும் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்றது. அப்போது ஒரேநாடு, ஒரே தேர்தல் மற்றும் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றும் மத்திய அரசின் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com