உ.பி. மாநிலம் புல்பூரில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக தகவல்!

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி வாத்ரா, வரும் மக்களவைத் தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலம் புல்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புல்பூர் தொகுதி காந்தி குடும்பத்தினருக்கு பரிச்சயமான தொகுதி என்று சொல்லப்படுகிறது. முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு 1952, 1957 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் புல்பூர் மக்களவைத் தொகுதியில்தான் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

உ.பி.யில் வழக்கமாக காந்தி குடும்பத்தினர் போட்டியிடும் இரண்டு தொகுதிகள் அமேதி மற்றும் ரேபரேலி. புல்பூரும் அவர்களுக்கு அறிமுகமான தொகுதிதான். எனினும் புல்பூர் மக்களவைத் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதனிடையே, மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில், பிரியங்கா ஜபல்பூர் மக்களவைத் தொகுதியில் நிறுத்தப்படலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை போட்டியிட்டு வென்ற வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரியங்கா போட்டியிடக்கூடும் என்று தகவல்கள் வெளிவந்தன. உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராவ், பிரியங்கா வாராணசி தொகுதியில் போட்டியிடலாம் என்றும் கூறியிருந்தார்.

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி போட்டியிடக்கூடும் என்று செய்திகள் வெளியான நிலையில், அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்றத்துக்கு வந்தால் அதை மக்கள் வரவேற்பார்கள் என்று பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா கூறியிருந்தார்.

மேலும் பிரியங்காவுக்கு உத்தரப்பிரதேச மாநிலம்,  அமேதி அல்லது சுல்தான்பூரில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளிக்கலாம் என்றும் கூறியிருந்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிரியங்காவுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் செல்வதை நான் வரவேற்கிறேன்.

காங்கிரஸ் கட்சித் தலைமை நிச்சயம் அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கும் என்று நம்புகிறேன் என்றும் வாத்ரா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரான அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை தோல்வியுறச் செய்தவர். முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான மேனகா காந்தி, சுல்தான்பூர் தொகுதி எம்.பி.யாவார். எனினும் காங்கிரஸ் மேலிடமோ அல்லது பிரியங்கா காந்தியோ மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com