அதானி விவகாரம்:ஜே.பி.சி. விசாரணை நடத்த ராகுல்காந்தி வலியுறுத்தல்!

அதானி விவகாரம்:ஜே.பி.சி. விசாரணை நடத்த ராகுல்காந்தி வலியுறுத்தல்!

தானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

மும்பையில் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலையில் இந்த கோரிக்கையை ராகுல் முன்வைத்துள்ளார். அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளில் தனது நிலையை பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்று ராகுல் கோரினார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் ஏன் இன்னும் விசாரணைக்கு உத்தரவிட முன்வரவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. அவர் ஏன் அமைதியாக இருக்கிறார்? அதானி குழுமத்தின் மீதான புதிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புவோம் என பிரதமர் மோடி கூற தயங்குகிறார். ஜி-20 நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்க வரும் முன்பு இந்த முக்கியமான கேள்வி எழுப்பப்படுவதாகவும் ராகுல் கூறினார். திட்டமிட்டு குற்றங்கள், ஊழல்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை அதானி குழுமத்தின் பங்குகளில் மொரீஷஸ் நிதி கணிசமாக அளவு முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இது அதானி குடும்பத்தின் தொடர்புகளை மறைப்பதாகவும்  குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுதில்லியில் செப்.9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டுக்கு முன்னதாக பிரதமர் மோடி இந்த விவகாரத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று ராகுல் கோரினார். இந்திய பொருளாதாரத்தில் அதானி என்ற மனிதருக்கு மட்டும் ஏன் இலவச சவாரி வழங்கப்படுகிறது என்றும் ராகுல் காந்தி எம்.பி. கேள்வி எழுப்பினார்.

அதானி குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கியுள்ளனர். இதற்கு பின்னணியாக செயல்பட்டுள்ளவர் கெளதம் அதானியின் சகோரதரர் வினோத் அதானி. இது தவிர மேலும் இருவர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். ஒருவர் நாசர் அலி ஷபான் அஹ்லி, மற்றொருவர் சீனாவைச் சேர்ந்த சாங் சுங் லிங். இந்திய கட்டமைப்பு கொண்ட நிறுவனத்தில் இந்த இரு வெளிநாட்டு பிரஜைகளுக்கு என்ன வேலை என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதானி விவகாரத்தை எழுப்பும் போதெல்லாம் பிரதமர் மோடி பதற்றம் அடைவது ஏன்? இதில் பிரதமருக்கு நெருக்கமான தொடர்பு உள்ளதா. அதானி விவகாரத்தை எழுப்பினால் பிரதமர் தர்மசங்கடத்துக்கு உள்ளாவது ஏன் என்றும் ராகுல் கேட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com