நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்:காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என ராகுல்காந்தி நம்பிக்கை!

நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்:காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என ராகுல்காந்தி நம்பிக்கை!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிஸோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சியமைக்கும். மேலும் தெலங்கானாவிலும் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளது என்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் அஸ்ஸாமில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசியதாவது,”மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி மீது பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதூரி அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை திசைத்திருப்பவே பா.ஜ.க. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

2024 ஆண்டு பொதுத் தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு நிச்சயம் அதிர்ச்சியைத் தரும் வகையில் இருக்கும். ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கோஷமும் பா.ஜ.க.வின் திசைத்திருப்பும் நடவடிக்கைதான்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி உறுதியாகிவிட்டது. தெலங்கானா மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

நாங்கள் மக்கள் பிரச்னையை முன்வைக்கும் போதெல்லாம், பா.ஜ.க.வினர் அதை திருப்பும் வகையில் பேசி வருகின்றனர். அதனால், நாங்கள் எங்கள் உத்தியை மாற்றி வருகிறோம். ஆட்சிக்கு வந்தால் நாங்கள் என்ன செய்வோம் என்று கூறி மக்களிடம் பிரசாரம் செய்கிறோம்.கர்நாடகத்தில் நாங்கள் தேர்தல் வாக்குறுதிகளை முன்னிறுத்தி மக்களிடம் பிரசாரம் செய்தோம். அது எங்களுக்கு பலன் தந்தது.

தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியை எதிர்கொள்ளும் சக்தி காங்கிரஸுக்குத்தான் உள்ளது. அங்கு பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு இல்லை. இந்த முறை தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றிபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. நாட்டின் 60 சதவீத மக்கள் எங்களை ஆதரிக்கிறார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பலத்த அடி கிடைக்கப்போவது உறுதி.

நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீட்டு அளிக்க வகை செய்யும் மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. அதை உடனடியாக அமலுக்கு கொண்டு வருவதில் எந்த சிக்கலும் இல்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கும் தொகுதி மறுவரையறை அல்லது சாதி வாரி கணக்கெடுப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார் ராகுல்காந்தி.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com