
2024 மக்களவைத் தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் பா.ஜ.க.வின் ஸ்மிருதி இரானியை எதிர்த்து போட்டியிட தயாராகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.
இத்தகவலை உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் ராய் தெரிவித்தார்.
அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட ராகுல்காந்தி உண்மையிலேயே விரும்புகிறாரா? என்று அஜித் ராயிடம் கேட்டபோது, அமேதியில் ராகுல் போட்டியிட வேண்டும் என்பது மக்கள் விருப்பமாகும் என்று அவர் தெரிவித்தார்.
காந்தி குடும்பத்தின் தொகுதியான அமேதி தொகுதியில் முதல் முதலில் 2004 இல் போட்டியிட்ட ராகுல்காந்தி மூன்று முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவர் பா.ஜ.க.வின் ஸ்மிருதி இரானியிடம் தோற்றுப்போனார். எனினும் கேரள மாநிலம், வயநாட்டிலும் அவர் போட்டியிட்டதால் அந்த தொகுதியிலிருந்து அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பினால், அவர். உ.பி.யில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும் ராய் தெரிவித்துள்ளார்
பிரியங்கா காந்தி, வாராணசி தொகுதியில் போட்டியிட விரும்பினால், ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் அவரின் வெற்றிக்கு உழைப்பார்கள் என்றும் ராய் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக அஜய் ராய், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் காக்கேவால் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் எம்.எல்.ஏ.வான அஜய் ராய், 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாராணசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
தொழிலதிபர் ராபர்ட் வாத்ரா, தமது மனைவியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தி, 2024 பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார். பிரியங்கா மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமேதி அல்லது சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
பிரியங்கா மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அதை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பார்கள். அவர், சுல்தான்பூர் அல்லது அமேதி அல்லது எந்த ஒரு தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்று ராபர்ட் வாத்ரா தெரிவித்துள்ளார்.