மாநிலங்களவையில் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா!

rajya sabha
rajya sabha

களிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் இந்த மசோதாவுக்கு மக்களவை புதன்கிழமை இரவு ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை மாநிலங்களவையும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்த்தும் மசோதா சட்டமாகும்.

மகளிர் இடஒதுக்கீட்டுக்கான அரசமைப்புச் சட்டத்தின் 128–வது திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேறியது. மசோதாவகுக்கு ஆதரவாக 454 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவாகின.

இந்த நிலையில் மாநிலங்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். தற்போதைய மசோதாவின்படி அது சட்டமான பிறகு, மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரை செய்யும் பணிக்குப் பிறகே இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த இடஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரின. அதே நேரத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு கட்சி பாகுபாடின்றி ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசுக்கு வாய்ப்புள்ளது என்ற போதிலும் 2031ம் ஆண்டுவரை ஏன் தாமதப்படுத்துகிறது என்பது தெரியவில்லை என்றார்.

மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான  தேவேகெளட தமது பதவிக்காலத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்காக தாம் ஆற்றிய பணிகளை குறிப்பிட்டார்.

திமுக பெண் எம்.பி. கனிமொழி சோமு பேசுகையில் இந்திய குடியுரிமை சட்டத்திருத்தம், வேளாண் மசோதாக்கள், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற சர்ச்சைக்குரிய மசோதாக்களை நிறைவேற்றிய பா.ஜ.க. அரசு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவர 9 ஆண்டு ஆனது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரையன் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ள 16 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வர்கூட இல்லை. இதன் மூலம் மகளிர்க்கு இடஒதுக்கீடு அளிப்பதில் அந்த கூட்டணிக்கு ஆர்வம் இல்லை என்றார்.

மகளிர் இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடு அளிப்பது குறித்து பரிசீலிக்க இந்த மசோதாவை தேர்வுக்கு அனுப்ப வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா வலியுறுத்தினார்.

விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நீண்டகாலமாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிலுவையில் உள்ளது. இதை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டியது முக்கியம் என்றார்.

பின்னர் நீண்ட விவாதத்துக்கு பின் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 214 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். எதிர்பாக்க ஒருவாக்குகூட பதிவாகவில்லை.மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமானால் மக்களவையில் பெண் எம்.பி.க்களின் பலம் 181 ஆக அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com