
ராஜஸ்தானில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும். அங்கு ராம ராஜ்ஜியம் அமைவது உறுதி. ஊழலற்ற நிர்வாகத்தை பா.ஜ.க. மக்களுக்கு அளிக்கும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகுர் தெரிவித்தார்.
பில்வாராவில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் காட்டு ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். பா.ஜ.க. ஊழலற்ற நிர்வாகத்தை அளிக்கும். பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வினாத்தாள் வெளியாவது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம். அங்கு ராம ராஜ்ஜியத்தை உறுதிப்படுத்துவோம்.
காங்கிரஸ் கட்சி சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி வருகிறது. சனாதன தர்மத்தை ஒழிக்க முயற்சி செய்கிறது. ஹிந்துக்களை அவமதிக்க தயாராகிவிட்டது. அரசியலமைப்புச் சட்டத்தை நசுக்கப் பார்க்கிறது. சனாதனத்துக்கு முடிவு கட்டுவோம் என்று கூறும் அரசியல் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டுவைத்துள்ளது. அவர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறது. அவர்கள் இப்போது பத்திரிகையாளர்களையும் புறக்கணிக்க தொடங்கியுள்ளனர். பயத்தினால் அவர்கள் எங்கள் மீது (பா.ஜ.க.வினர் மீது) புகார் கூறிவருகின்றனர் என்றார் அனுராக் தாகுர்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலோட் அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை அனுராக் தாக்கூர் முன்வைத்தார். மேலும் காந்தி குடும்பத்தினர் மீது மறைமுக தாக்குதல் நடத்தினார். ராகுல் காந்தி மற்றும் மருமகன் ராபர்ட் வாத்ரா இருவரையும் திருப்திப்படுத்துவதிலேயே கெலோட் அரசு கவனம் செலுத்திவருகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து பேசிவருகின்றனர். தேநீர் விற்பவர் நாட்டை ஆள்வதா என்று கேலி செய்கின்றனர்.
காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது கஜானாவை காலிசெய்துவிட்டுச் சென்றது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான் அரசுக்கு வருவாயைப் பெருக்கி மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்றார் அனுராக் தாகுர்.