முறையான காரணங்கள் இன்றி அதிக நாட்கள் குழந்தைகள் பள்ளிக்கு லீவு எடுத்தால், பெற்றோர்கள் சிறை தண்டனை அனுபவிக்கும்படி கடுமையான சட்டத்தை சவுதி அரேபியா கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சவுதி அரேபியா என்றாலே அங்கு சட்டங்கள் கடுமையாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இன்றளவும் அங்கு மன்னராட்சி நடந்து வருவதால், சவுதி அரேபியாவில் சட்டதிட்டங்கள் கடுமையாக இருக்கிறது. அங்கே சிறிய குற்றங்களுக்குக்கூட மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.
இந்நிலையில்தான் பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மிகக் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, வரும் கல்வியாண்டு முதல், குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெற்றோர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது முறையான காரணம் இன்றி ஒரு மாணவர் 20 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், அவரின் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப் பெற்றோரை விசாரணைக்கு உட்படுத்தி, நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு அனுப்பப்படும். மாணவர் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருந்தது பெற்றோரின் அலட்சியம் காரணமாக இருந்தால், இது அந்த விசாரணையில் நிருபிக்கப்படும் பட்சத்தில், அதற்கான தக்க தண்டனையை நீதிபதி பெற்றோருக்கு விதிப்பார்.
மாணவர்களின் கல்வியைக் காக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதாம். ஏதாவது மாணவர் 20 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றாலே அவரின் பெற்றோருக்கு இந்த தண்டனை வழங்கப்படாது எனவும், இதற்காக சில வரைமுறைகள் இருப்பதாகவும் சவுதி ஊடகங்களில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது ஒரு மாணவர் நீண்ட காலம் விடுப்பு எடுத்திருந்தால், இது சம்பந்தமாக அந்த பள்ளியில் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து கல்வி அமைச்சகம் அதற்கான விசாரணையை முன்னெடுக்கும். இதில் மாணவர் பள்ளிக்கு வராததற்கான காரணம் பெற்றோரின் அலட்சியம் என்றால், இந்த விசாரணை அடுத்த கட்டத்திற்கு செல்லும். இல்லையேல் மாணவரின் நீண்ட விடுப்புக்கு தகுந்த காரணம் இருந்தால், இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்கு செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை நமது இந்தியாவில் கொண்டுவரப்பட்டால் என்ன ஆகும்?