
இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது முக்கிய ஆலோசனைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 2024 பொதுத் தேர்தலுக்கு கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
11 உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக்குழுவை அமைப்பது, தொகுதிப் பங்கீடு, கூட்டணியை பலப்படுத்துவது, மாநில அளவில் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை தங்கள் பக்கம் இழுப்பதற்கான உத்திகளை வகுப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிக் கூட்டணியின் சின்னம் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி.க்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத ஆறு மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்ட 28 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
11 உறுப்பினர்கள் அடங்கிய கூட்டுக்குழு அமைப்பதும், கூட்டணிக்கு அமைப்பாளரை தேர்ந்தெடுப்பதும் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
தொகுதிப்பங்கீடு குறித்து பல்வேறு அரசியல்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்த கூட்டுக்குழு முக்கிய பங்கு வகிக்கும் என்று சொல்லப்படுகிறது. அமைப்பாளர் பதவிக்கு பிகார் முதல்வர் நிதிஷ்குமார் நியமிக்கப்படலாம் எனவும், அவரை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று இதுவரை விவாதிக்கப்படாத நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் இருவரும் பிரதமர் பதவி வேட்பாளராக ராகுல்காந்திதான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இது அவர்களது சொந்த விருப்பம் என்றாலும் இது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுமா என்று தெரியவில்லை.
அவதூறு வழக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட ராகுல்காந்தி, உச்சநீதிமன்ற உத்தரவின் மூலம் மீண்டும் எம்.பி. தகுதியை பெற்றுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார் ராகுல் காந்தி. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே சர்ச்சைகளும் பதற்றமும் உருவாகியுள்ள நிலையில் மும்பை கூட்டம் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் தேர்தலில் மூழுவீச்சில் களம் இறங்கப்போவதாக ஆம் ஆத்மி கூறிவரும் நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தைப் போர் நீடித்து வருகிறது.
எனினும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க வாய்ப்பில்லை என்று மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். கேரளம், பஞ்சாப், தில்லி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட், ஆம் ஆத்மி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளுடன் நேரடியாக மோதுகிறது. இவை நேரடி மோதலில் ஈடுபட்டாலும் தேர்தலுக்குப் பின் கூட்டணி சேரும் வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது. மாநில அளவில் இந்த கட்சிகளிடையே கருத்து மோதல்கள் இருந்தாலும், தேசிய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் இதன் நோக்கமாகும்.
இதனிடையே எதிர்காலத்தில் இந்தியா கூட்டணியில் மேலும் சில அரசியல்கட்சிகள் இணையக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில அரசியல்கட்சிகளும், மகாராஷ்டிரம் மற்றும் உ.பி.யில் சில அரசியல் கட்சிகளும் எதிர்க்கட்சி கூட்டணியில் சேருவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவை பா.ஜ.க. எதிர்க்கும் பிராந்திய கட்சிகள் என்று குறிப்பிட்ட நிதிஷ்குமார், அவற்றின் பெயர்களை குறிப்பிட மறுத்துவிட்டார்.