
இன்றைய அவசர வாழ்க்கையில் நாம் இழந்தது நிறைய அதில் குறிப்பிடத்தக்கது குடும்ப உறவுகள் .கல்வி பணி நிமித்தம் சொந்த ஊரை விட்டு வெகு தூரம் பயணிக்கும் இளம் தலைமுறையினரிடம் அவரவரின் தாத்தா பெயரைக் கேட்டாலே தடுமாறுவார்கள் .இதை எண்ணி வருத்தப்படுவதுடன் நமது கடமை முடிந்து விடவில்லை என்று உணர்த்துகிறார்கள் சேலத்தை சேர்ந்த குடும்பத்தினர்.
ஆம் . தாத்தா வழி சொந்தங்களை ஒருவருக்கொருவர் அறிந்து மகிழ நகரின் பல பகுதிகளில் இருந்த ஏழு தலைமுறையினர் ஒன்றாகக் கூடி ஒரு குடும்ப விழாவை வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டியுள்ளனர். இதைப்பற்றி அங்கு இருந்த பெரியவர் ஒருவர் “ எங்களுக்கு எல்லாம் இந்த நிகழ்வு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது .இதனால் எங்கள் பிள்ளைகள் அவர்களின் சொந்தங்களை தெரிந்து கொண்டனர் .இனி இந்த தொடர்புகள் வரும் காலங்களிலும் தொடரும் .இதை முன்னெடுத்து நடத்திய எங்கள் தாத்தா வழி வந்த சகோதர்களுக்கு நன்றி “ என்று நெகிழ்ந்தார் .
1873 ஆம் ஆண்டு வணிக வம்சத்தில் பிறந்த உத்தராசன் என்பவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டத்தில் உள்ள மொரங்கம் எனும் கிராமத்தில் பிறந்து பிள்ளாநல்லூரில் வசித்துள்ளார். இவர் அந்நாளில் சின்ன வெங்காய வியாபாரம் செய்து வந்ததாகவும் அப்போது பெருகிய பெரியம்மை தொற்றுக்கு மருந்தாக ஆங்கிலேயரே இவரிடமிருந்து வெள்ளி நாணயங்களுக்கு சின்ன வெங்காயத்தை வாங்கிச்சென்று உள்ளனர்.
சமூகப்பணிகளிலும் சிறந்து விளங்கிய இவரின் மனைவி காவேரி அம்மாள் .இவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்துள்ளனர் .இவர்களின் வாரிசுகள் பின்னாளில் பல இடங்களுக்கும் சென்று விட்டனர்.
தாத்தாவின் 150வது பிறந்த வருடத்தில் இவர்கள் இணைந்துள்ளது சிறப்பு. அரசுப்பணி முதல் தகவல் தொழில்நுட்பம் வரை பல்வேறு பணிகளில் இருந்த இவர்கள் ஒருங்கிணைந்து தாத்தாவின் ஊரான பிள்ளாநல்லூரில் உள்ள குலதெய்வக் கோவில் மண்டபத்தில் குடும்ப விழாவை நடத்தியது இதை அறிந்த அனைவரையும் ஆச்சயத்தில் ஆழ்த்தியுள்ளது .
சேலம் , மும்பை ,கேரளா, பெங்களுரு ,தெலுங்கானா என்று அனைத்துப் பகுதிகளில் வாழும் இந்தக் குடும்பத்தை சேர்ந்த சுமார் 400 பேர் இந்த விழாவில் கலந்து கொண்டனர் .மூன்று வயதுக் குழந்தை முதல் எண்பது வயது முதியோர் வரை ஒவ்வொரு தலைமுறையையும் அடையாளப்படுத்திய வண்ண உடைகள் அணிந்து அறிமுகம் ஆட்டம் பாட்டம் போட்டிகள் அறுசுவை உணவு பரிசுகளுடன் மனம் நிறைந்து சென்றதாகவும் இனி வரும் காலங்களிலும் இந்த நிகழ்வு தொடரும் என்றும் கூறி மகிழ்ந்தனர் இந்த விழாவை முன்னின்று ஏற்பாடு செய்தவர்கள் .
இதே போன்று தங்கள் குடும்பங்களும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி மகிழவேண்டும் என விரும்பும் பலருக்கு இவர்கள் ஒரு முன்மாதிரி குடும்பமாக திகழ்கின்றனர் .