சரத் பவார் அரசியலிலிருந்து ஓய்வுபெறும் நேரம் வந்துவிட்டது! சொல்வது யார் தெரியுமா?

சரத் பவார் அரசியலிலிருந்து ஓய்வுபெறும் நேரம் வந்துவிட்டது! சொல்வது யார் தெரியுமா?

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு வயதாகிவிட்டது. எனவே அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெறும் நேரம் வந்துவிட்டது என்கிறார் தொழிலதிபரும், சீரம் நிறுவனத்தின் நிறுவனருமான டாக்டர் சைரஸ் பூனாவாலா.

சரத் பவாருக்கு இரண்டு முறை நாட்டின் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்புகளை அவர் தவறவிட்டுவிட்டார். வயதாகிவிட்ட அவர் இனி அரசியலில் ஈடுபடுவது சரியல்ல என்றும் அவர் அறிவுரை கூறினார்.

புனேயில் “மீட் அண்ட் கிரீட்” மிஸ் வேர்ல்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொழிலதிபர் பூனாவாலா பேசினார். அப்போது அவர் கூறுகையில் சரத் பவார், மிகவும் புத்திசாலியான நபர். ஆனால், பிரதமர் ஆவதற்கு இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தும் அவர் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டார். எனக்கும் வயதாகி வருகிறது. அதேபோல எனது நண்பர் சரத்பவாருக்கும் வயதாகி வருகிறது. எனவே அவர் பொது வாழ்விலிருந்து ஓய்வுபெற வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

மும்பையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியான “இந்தியா” கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணி பங்கேற்கும் நிலையில் பூனாவாலா இந்த கருத்தை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சரத் பவாரின் உறவினர் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று மகாராஷ்டிரத்தில் ஷிண்டே தலைமையிலான ஆளும் சிவசேனை, பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்துள்ளதும், துணை முதல்வராக பதவியேற்றதும் குறிப்பிடத்தக்கது.

சரத் பவார், மகாராஷ்டிர முதல்வராக நான்கு முறை பதவி வகித்துள்ளார். மத்திய அமைச்சரவையிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

புனே ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் புதன்கிழமை நடைபெற்ற மிஸ் வேர்ல்டு 2023 குழு நிகழ்ச்சிக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். இதில் 2022 இல் மிஸ் வேர்ல்டு பட்டம் வென்றி பிலாவ்ஸ்கா, மிஸ் இந்திய பட்டம் வென்ற ஸ்ரீனி ஷெட்டி, மிஸ் வேர்ல்டு அமெரிக்கா பட்டம் வென்ற ஸ்ரீசைனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com