
மகாராஷ்டிர அரசியல் சூடுபிடித்துள்ளது. அஜித் பவார் என்.சி.பி. தலைவர், கட்சியில் பிளவு இல்லை என்று தாம் ஒருபோதும் கூறவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் பல்டி அடித்துள்ளார். அஜித்பவாரை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார்.
மகாராஷ்டிரத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும், ஆளும் பா.ஜ.க.வும் சரத் பவார் தெரிவித்த கருத்துக்களை தங்களுக்குச் சாதமாக பயன்படுத்திக் கொண்டன. சரத் பவார் விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவார். அதனால்தான் அவர் கட்சியில் பிளவு இல்லை என்று கூறியதாக பா.ஜ.க.வும், மூத்த பவார், பா.ஜ.க.வினரை குழப்பவே அப்படி பேசினார் என்று எதிர்க்கட்சியினரும் வாதிட்டனர்.
இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறுகையில், துணை முதல்வர் அஜித் பவார், தமது உறவினர் சரத்பவார சந்தித் பிறகு கட்சிக்கு திரும்பியிருக்கலாம், அஜித்பவாரின் மனதை மாற்றுவதில் சரத் பவார் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது. சரத் பவார் குறித்து காங்கிரஸ் மற்றும் உத்தவ் தலைமையிலான சிவசேனையில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் சரத்பவாரின் பின்னால் உறுதியாக நிற்கிறோம். என்.சி.பி.யில் என்ன நடக்கிறது, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் நானா படோல்.
எனினும் மாநில பா.ஜ.க. தலைவர் சந்திரசேர் பன்குலே கூறுகையில், சரத்பவார் வளர்ச்சி அரசியலில் நம்பிக்கை கொண்டவர். விரைவில் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார் என்று தெரிவித்திருந்தார். 2024 பொதுத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே சரத் பவார் உள்பட ஒவ்வொருவரும் பா.ஜ.க. கூட்டணியில் சேரவே விரும்புகின்றனர் என்றும் அவர் கூறியிருந்தார்.
2019 –ல் ஒரு நாள் அதிகாலையில் பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னவிஸுடன், அஜித் பதவியேற்ற சம்பவத்தை சரத் பவார் நினைவுகூர்ந்தார். அப்போது அவருக்கு (அஜித்பவாருக்கு) மீண்டும் என்.சி.பி.க்கு திரும்ப வாய்ப்பு அளிக்கப்பட்டது. மீண்டும் அவருக்கு அதுபோன்ற வாய்ப்பு தரப்படமாட்டாது என்றார்.
அஜித் பவார்தான் கட்சித் தலைவர் என்று இரண்டு நாட்கள் முன்பு கூறினீர்களே என்று கேட்டதற்கு, நான், அவரை கட்சித் தலைவர் என்று ஒருபோதும் கூறவில்லை என்றார். பாராமதியில் செய்தியாளர்களிடம் பேசும்போது கட்சியில் பிளவு இல்லை என்றுதான் கூறினேன்.
சிலர் வேறு விதமான முடிவுகளை எடுக்கலாம். அதை கட்சியில் பிளவு என்று கூறிவிட முடியாது. கட்சியிலிருந்து தேசிய அளவில் பெரும்பாலானவர்கள் வெளியேறினால்தான் பிளவு என்று கூற முடியும். அதுபோன்ற பிளவு ஏதும் ஏற்படவில்லை என்றுதான் கூறினேன் என்றார் சரத்பவார்.