மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: எட்டு பேர் பலி; ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: எட்டு பேர் பலி; ஆயுதங்கள் பறிமுதல்!

ணிப்பூரில் மீண்டும் வன்முறை தலைதூக்கி உள்ளது. விஷ்ணுபூர் மற்றும் சூரச்சந்தர்பூரில் குக்கி இன மக்களுக்கும் மெய்டீஸ் இன மக்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 பேர் பலியானார்கள். 18 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், மக்களை அமைதி காக்கும்படி முதல்வர் பீரேன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, சூரச்சந்தர்பூர் மாவட்டம் சிங்பெய் மற்றும் கெளசாபங்கில் புதிதாக துப்பாக்கிச் சண்டை நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி கோயிரென்டாக் பகுதியில் நடந்த துப்பாக்கி மோதலில் 30 வயது கிராமவாசி ஒருவர் உயிரிழந்தார். விஷ்ணுபூரில் நரைன்சேனா கிராமத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, கடந்த வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினர் சூரச்சந்த்பூர் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் நடத்திய தேடுதல் வேட்டையில் 20 பைப் குண்டுகள், 3 ஆயுதங்கள் மற்றும் 20 ரவுண்டு சுடுவதற்கான தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கைப்பற்றியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மணிப்பூரில் பல்வேறு மாவட்டங்களில் முக்கியமான இடங்களில், குறிப்பாக மலைப்பகுதிகளிலும், பள்ளத்தாக்கு பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டன. இதையடுத்து 1900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, போலீஸார் மக்களிடம் சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அமைதியாக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளனர். சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் கீழே ஏதேனும் பொருட்கள் கிடந்தால் அதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியிலிருந்து தொடர் வன்முறை காரணமாக சூரச்சந்த்பூரில் லோன்பாய், கெளஸாபங், கங்க்வாய் மற்றும் சுக்னு பகுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மருத்துவம், குடிநீர்,  மின்சாரம் போன்ற அவசரத் தேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போது மீண்டும் வன்முறை நீடித்துவருவது குறித்து முதல்வர் பீரேன் சிங் கவலை தெரிவித்துள்ளார். சட்ட விரோதமாக சிலர் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளதே பிரச்னைக்குக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே 3ம் தேதி மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்டீஸ் இன மக்களிடையே உருவான மோதல், வன்முறையாக வெடித்ததில் 160 பேர் கொல்லப்பட்டனர். மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்டீஸ் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com