சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்க 9 விஷயங்கள்:பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்!

சோனியா காந்தி - பிரதமர் மோடி
சோனியா காந்தி - பிரதமர் மோடி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் 18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்கள் பிரச்னையை எழுப்ப வாய்ப்பு கிடைத்துள்ளதால் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் ஆர்வமாக உள்ளதாக சோனியா தெரிவித்துள்ளார்.

இதர அரசியல்கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், கூட்டத்தில் எதைப் பற்றி விவாதிக்கப்பட உள்ளது என்பது பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது என்றும் சோனியா குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எங்களுக்கு தெரிவிக்கப்பட்ட தகவல், ஐந்து நாள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது என்பதுதான். இதில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம். ஏனெனில் இந்த கூட்டத்தில் மக்கள் பிரச்னைகளை முன்வைக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவே கருதுகிறோம் என்று சோனியா தெரிவித்துள்ளார்.

அவர் அந்த கடிதத்தில் மேலும் எழுதியுள்ளதாவது: சாதிவாரி கணக்கெடுப்பு, மணிப்பூர் விவகாரம், வகுப்பு மோதல்கள், விலைவாதி உயர்வு, பணவீக்கம் என பல விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டும். அவை அலுவல் விதிகளின்படி இவற்றுக்கு உரிய நேரம் ஒதுக்கப்படும் என்று நம்புகிறேன். அத்தியாவசிய பொருள்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில் நடப்பு பொருளாதார நிலை குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். வேலையின்மை அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை குறித்து விவசாயிகளுக்கு மத்திய அரசு அளித்த உறுதிமொழி என்னவானது. அதானி விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என்று கோரி வருகின்றனர். இப்படி பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும் சோனியா கூறியுள்ளார்.

மேலும் பல மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் குறித்தும் விவாதிக்க வேண்டும். மணிப்பூரில் மக்கள் தொடர்ந்து துயரத்தை சந்தித்து வருகிறார்கள். அங்கு அரசு இயந்திரம் முடங்கிக் கிடக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய தேவை உள்ளது. இயற்கை பேரழிவு ஏற்படும் போதும், வெள்ளம், வறட்சியின்போதும் சேத மதிப்பீடு குறித்து மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இது தீர்க்கப்பட வேண்டும்.

ஹரியாணாவில் வகுப்பு மோதல் அதிகரித்து வருவது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இந்திய நிலப்பரப்பை சீனா தொடர்ந்து ஆக்கிரமித்து வருவது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு உணர்வில் இந்த விஷயங்கள் சிறப்பு கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் என்றும் சோனியாகாந்தி அந்த கடித்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com