
‘மக்களவை தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான முன்னோட்டம்தான் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம்’ என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மும்பையில் இரண்டு நாள் நடைபெற்ற, ‘இந்தியா’ எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற நிதிஷ்குமார் இன்று சனிக்கிழமை பாட்னா திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் இப்படி அவர் தெரிவித்தார்.
‘2024 மக்களவை தேர்தலை முன்கூட்டியே நடத்த மோடி அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் அதற்கான முன்னோடிதான். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்பதை நானும் அடிக்கடி மறைமுகமாகக் கூறிவந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்’ என்றார் நிதிஷ்குமார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் மறு தேதி குறிப்பிடப்படாமல் முடிவடைந்தது. இப்போது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் செப்டம்பர் 18ல் தொடங்கி, 22ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எதற்காக இந்தக் கூட்டம், என்ன விஷயங்கள் இதில் விவாதிக்கப்படும் என்பது பற்றிய தகவல்களை மத்திய அரசு வெளியிடவில்லை.
‘‘ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு மக்களவையில் 16 எம்.பி.க்கள் இருந்தபோதிலும், ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பற்றிய கேள்விக்கு நிதிஷ்குமார் பதிலளிக்கவில்லை. ஆனால், சில முக்கியமான விஷயங்கள் இந்த சிறப்புக் கூட்டத்தின்போது எழுப்பப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை மத்திய அரசு இழுத்தடித்துக்கொண்டே வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை விடுங்கள். வழக்கப்படி எப்போதோ நடத்தி முடித்திருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்தவில்லை. ஆனால், மற்ற எல்லா விஷயங்களில் கவனம் செலுத்த மட்டும் இந்த அரசுக்கு நேரம் இருக்கிறது’’ என்றார் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னர் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர்.