
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை காற்று மாசை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டத்தை நடத்தினர்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் காற்று புற்றுநோயை விளைவிப்பதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் அதிலிருந்து வெளிவரும் காற்றை சுவாசிப்பதால் கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டு, பிறக்கும் குழந்தைகளுக்கும் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
இதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது போராட்டத்தினுடைய 100வது நாளில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மேற்பட்ட கலவரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
இது தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு மூடியது. அதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், தூத்துக்குடியில் காப்பர் ஆலையை நிறுவி வேதாந்த நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி இருக்கிறது.
சம்பந்தப்பட்ட நிறுவனம் அடிப்படை விதிமுறைகளை கூட முறையாக பின்பற்றவில்லை. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது அந்தப் பகுதியில் அதிகம் காணப்படுகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிப்பது என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்க முடியாது. மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பலமுறை சோதித்த பிறகே இது தொடர்பான முடிவை எடுக்கப்பட்டு இருக்கிறது.
எனவே வேதாந்த நிறுவனம் பதிவு செய்துள்ள இந்த மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.