இந்த மாதம் முதல் தொடங்கப்பட்ட மகளிர் உரிமை தொகை இனி ஒவ்வொரு மாதம் 15ஆம் தேதி பெண்களின் வங்கிகளில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்ப விநியோகம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முகாமைத் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1.6 கோடிபேரின் விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டன. தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை செல்கிறதா என ரூ.1 அனுப்பி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. ஒரு ரூபாயை அனுப்பிய உடன் பயனாளிகளின் கைப்பேசிக்கு இது குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் இனி மாதம் மாதம் எந்த தேதியில் பணம் வரும் என பெண்களுக்கு கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக மாதம் தோறும் 15ஆம் தேதி அனைத்து பெண்களின் வங்கி கணக்கிலும் ரூ.1000 வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.