
தமிழ்நாட்டின் பாரம்பரிய பயன்பாடுமிக்க பொருளாக இருந்த கோரைப்பாய், பிளாஸ்டிக் பாய் மற்றும் மெத்தைகளினுடைய வரத்து காரணமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல்வேறு வகையான நெருக்கடிகளாலும் இந்த தொழில் அழிந்து வருவதாக கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் கோரைப் பாய் பயன்பாடு என்பது பாரம்பரிய நடைமுறையாகும். அதிலும் கோரைப் பாயை பயன்படுத்துவதன் மூலம் உடல் சூடு தணிந்து உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகள் கிடைப்பதால் அதிக அளவில் கோரைப் பாய் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது பிளாஸ்டிக் பாய், மெத்தைகளுடைய வரத்து அதிகரிப்பின் காரணமாக கோரைப்பாயினுடைய பயன்பாடு பெரும் அளவில் குறைந்து இருக்கிறது.
அதே நேரம் கோரைப்பாய் தயாரிக்க கோரைப்புல் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இந்த கோரைப்புல் தமிழ்நாட்டின் திருச்சி, கரூர், சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. தற்போது கோரைப்பாய் பயன்பாடு குறைவதை அடுத்து, கோரைப்புல் விவசாயிகள் அதனுடைய உற்பத்தி பரப்பை குறைத்து இருக்கின்றனர். இதனால் கோரை புல் உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறைந்து இருக்கிறது.
இதனால் விலையும் அதிகரித்து இருக்கிறது அதேசமயம் கோரை பாய்க்கு தேவையான மூலப்பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி, மின்கட்டண உயர்வு, கூலி உயர்வு ஆகிய காரணங்களால் உற்பத்தியாளர்கள் மேலும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம் அரசு அளிக்க வேண்டிய சலுகைகளும் மிகக் குறைவாக இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் கோரைப்பாய் உற்பத்தி குறைந்து வருவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் வருங்காலத்தில் கோரைப்பாய் பயன்பாடு முற்றிலும் அழிந்துவிடும் என்றும் கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் தமிழ்நாட்டின் உற்பத்தி செய்யப்படும் கோரைப்பாய் நாட்டின் பிற மாநிலங்களுக்கு மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இது பாரம்பரிய தொழிலாக இருந்து வந்த நிலையில் தற்போது கடுமையான விலை ஏற்றம், பல்வேறு வகையான நெருக்கடிகள் காரணமாக கோரைப்பாய் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.