தெலங்கான தேர்தலில் போட்டியிடும் முதல்வர் கே.சி.ஆர்-க்கு சொந்தமாக கார் இல்லையாம்!

கே.சி.ஆர்
கே.சி.ஆர்

தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் (கே.சி.ஆர்., தமக்கு சொந்தமாக  ஒரு கார்கூட இல்லை என்று வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார்.

தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு வருகிற நவம்பர் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் கஜ்வெல் மற்றும் கமரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் வியாழக்கிழமை வேட்புமனுவுடன் சொத்துக்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளார்.

அதில் தமக்கு ரூ.17.83 கோடிக்கு அசையும் சொத்துக்களும், ரூ.8.50 கோடிக்கு அசையா சொத்துக்களும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், தமக்கு சொந்தமாக ஒரு கார்கூட இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தமது மனைவி ஷோபாவுக்கு ரூ.7 கோடி அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், பிரிக்கப்படாத ஹிந்து குடும்பத்துக்கு மொத்தமாக ரூ.9 கோடி அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராவ் பெயரிலான அசையா சொத்துக்களின் இன்றைய மதிப்பு ரூ.8.50 கோடி. பிரிக்கப்படாத ஹிந்து குடும்ப சொத்தின் இன்றைய மதிப்பு ரூ.15 கோடியாகும்.

கே.சி.ஆரின் மொத்த கடன் அளவு ரூ.17 கோடியாகவும், பிரிக்கப்படாத ஹிந்து குடும்பத்தின் கடன் சுமை ரூ.7.23 கோடியாகவும் இருப்பதாக தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிப்படி வருமானம் ரூ.1.74 கோடியாக இருந்தது, 2023 மார்ச் 31 நிலவரப்படி ரூ.1.60 கோடியாக இருந்ததாக வருமானவரி கணக்கு தாக்கலின் மூலம் தெரியவந்துள்ளது.

ராவின் கல்வித் தகுதி பி.ஏ. அவரது தொழில் விவசாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கே.சி.ஆர். மகனும் பாரத் ராஷ்டிர சமிதியின் செயல் தலைவருமான கே.டி.ராமராவ், தமக்கு ரூ.6.92 கோடி அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ10.4 கோடிக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாகவும்  வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். இவர் சிரிசில்லா தொகுதியில் போட்டியிடுகிறார்.

ராமராவின் மனைவி ஷாலிமாவுக்கு ரூ.26.4 கோடிக்கு அசையா சொத்தும், ரூ.7.42 கோடிக்கு அசையா சொத்துக்களும், மகள் அலேக்யாவுக்கு ரூ.1.43 கோடி மதிப்புக்கு அசையும் சொத்தும், ரூ.46.7 லட்சத்துக்கு அசையா சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.டி.ராமராவ், தமக்கு ரூ. 67.2 லட்சம் கடன் இருப்பதாகவும், மனைவிக்கு ரூ.11.2 கோடி கடன் இருப்பதாகவும், சொந்தமாக கார் உள்ளதாகவும், தம்மிடம் 100 கிராம் தங்க நகைகளும், மனைவியிடம் 4.7 கிலோ தங்க நகைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2022-23 ஆம் நிதியாண்டில் ரூ. 11.6 லட்சம் வருமானம் ஈட்டியதாகவும் ராவ் குறிப்பிட்டுள்ளார். ராவ் மீது 7 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com