மாணவிகளுக்கு ஸ்கூட்டர், பட்டியலினத்தவர்களுக்கு ரூ.12 லட்சம் நிதியுதவி: தெலங்கானாவில் காங்கிரஸ் வாக்குறுதி!

Telangana Congress
Telangana Congress

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 18 வயதான மாணவிகளுக்கு எலெக்டிரிக் ஸ்கூட்டர்,பட்டியலின குடும்பத்தினருக்கு ரூ. 12 லட்சம் மதிப்பிலான நிதியுதவி வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

தெலங்கானாவில் வருகிற நவம்பர் மாதம் 30 ஆம்தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தெலங்கானா மாநிலம், முலுகு என்னுமிடத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு பேசினார்.

தெலங்கானா மாநிலத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே 6 வாக்குறுதிகளை அளித்துள்ளது. இந்த நிலையில் கூடுதலாக “அம்பேத்கர் அபய ஹஸ்தம்” திட்டத்தின் கீழ் எஸ்.சி., எஸ்.டி. குடும்பத்தினருக்கு ரூ12 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரியங்கா தெரிவித்தார். (முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி அரசு (பி.ஆர்.எஸ்), மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தலித் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்திருந்த்து.)

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 18 சதவீதமாகவும், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 12 சதவீதமாகவும் அதிகரிக்கப்படும். நிலமற்ற தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு இந்திரா அம்மா வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீட்டு மனையும், வீடு கட்டிக்கொள்ள ரூ.6 லட்சமும் வழங்கப்படும். மேலும் ஆதிவாசி கிராமப் பஞ்சாயத்துகளுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

ஒராண்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும். தெலங்கானா மாநிலத்துக்காக உயிர்நீத்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் பிரியங்கா தெரிவித்தார்.தெலங்கானாவில் பி.ஆர்.எஸ். அரசு மக்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட தவறிவிட்டது. நல்ல எதிர்காலம் வேண்டும் என்றால் மக்கள் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

பிகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிவாசிகள், பழங்குடியினர் 84 சதவீதம் பேர் உள்ளனர. ஆனால், அவர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. நாடு முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. எனவே தான் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் கோரி வருகிறது. ஆனால், மத்தியில் ஆளுங்கட்சியினர் இதில் மெளனமாக உள்ளனர்.

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சமூக நீதி நிலைநாட்டப்படும், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும்.

தெலங்கானாவில் 40 லட்சம் இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர். ஆனால், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்த கே.சி.ஆர். அரசு, பின்வாங்கிவிட்டது. இன்று ஏராளமான வேலைவாய்ப்புகள் இருந்தும் வேலை கிடைக்கவில்லை. இதற்கு காரணம் வேலைவாய்ப்பில் நடந்து வரும் ஊழல்தான் என்றும் பிரியங்கா புகார் கூறினார்.

கே.சி.ஆர். தலைமையிலான பி.ஆர்.எஸ். அரசு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறது. மோடிதான் தில்லியிலிருந்து தெலங்கான அரசை இயக்கி வருகிறார் என்று குற்றஞ்சாட்டினார். மாநிலத்தில் நிலம், மணல், சுரங்கம், மதுபானம் மூலம் கொள்ளையடிப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்களை காப்பாற்றுவதில்தான் கே.சி.ஆர். அரசு குறியாக இருக்கிறது என்றும் பிரியங்கா கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com