தெலங்கானாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்: முதல்வர் கே.சி.ஆர். தொடங்கிவைத்தார்!

 கே.சந்திரசேகர ராவ்
கே.சந்திரசேகர ராவ்

தெலங்கானா மாநிலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ், இத்திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 23 லட்சம் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்.

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்த பின்னர் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்கள் துறை அமைச்சர் ராமராவ் கூறுகையில், மாநிலம் முழுவதும் இத்திட்டம் 27,147 அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு சுவையாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது சோதனை நடத்தி உறுதிசெய்யுமாறு அதிகாரிகளை அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் முதல்வ வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதைப் போலவே இங்கும் வழங்க திட்டமிடப்பட்டது.  எனினும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கேட்டுக்கொண்டதன் பேரில் இங்குள்ள அரசுப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை வருகிற 24 ஆம் தேதி விஜயதசமி நன்னாளில் இருந்துதான் தொடங்குவதாக இருந்தது. எனினும் இத்திட்டம் இப்போது முன்னதாகவே தொடங்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இயங்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிகள் செயல்படும் நாளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.

பள்ளி செல்லும் மாணவர்களின் ஊட்டசத்து குறைபாடுகளை போக்கும் நோக்கில் அரசு இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளது. மேலும் வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் சுமையை குறைக்கும் நோக்கிலும் இதை செயல்படுத்து பாரத ராஷ்டிர சமிதி அரசு முடிவு செய்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com