கர்நாடக பா.ஜ.க. புதிய தலைவர் விஜயேந்திராவுக்கு காத்திருக்கும் சவால்கள்!

எடியூரப்பா மகன் விஜயேந்திரா
எடியூரப்பா மகன் விஜயேந்திரா

டியூரப்பாவின் மகன் கர்நாடக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ளதால் அவருக்கு பெரும் சவாலாக உள்ளது.

கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக பாஜக தலைவராக 3 ஆண்டுகள் பணியாற்றிய நளின்குமார் கட்டீலுக்குப் பதிலாக 47 வயதான விஜயேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். நளின் குமார் பதவி முடிவடையும் நேரத்தில் கர்நாடக தேர்தல் வந்ததால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. எனினும் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது.

புதிய பொறுப்பை ஏற்ற பிறகு பேசிய திரு விஜயேந்திரா, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளிலாவது பாஜகவை வெற்றிபெறச் செய்வதே தனது நோக்கம் என்று தெரிவித்தார்.

பி.ஒய்.விஜயேந்திரா, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பி.எஸ். எடியூரப்பாவின் இளைய மகன் ஆவார், பெரும்பாலும் அவரது அரசியல் வாரிசாகக் கருதப்படுகிறார். சிவமொக்கா மாவட்டம் ஷிகாரிபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏவாக ஆகியிருக்கிறார். ஷிகாரிபுரா, தந்தை எடியூரப்பா பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதியாகும்.

தொழில் ரீதியாக வழக்கறிஞரான விஜயேந்திரா  கடந்த பத்தாண்டுகளில் பிரபலமடைந்தார். பாஜக தலைமை அவரை முதலில் மாநிலப் பொதுச் செயலாளராகவும், பின்னர் 2020 இல் மாநிலப் பிரிவு துணைத் தலைவராகவும் நியமித்தது. 2020-க்குப் பிறகு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை  இடைத்தேர்தல்களின்போது கட்சி அவருக்கு சில பொறுப்புகளை வழங்கியது.

இந்த ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பெங்களூருக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடியூரப்பாவின் இல்லத்திற்கு சென்றார். எடியூரப்பா  அவருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்க முற்பட்டபோது, அமித்ஷா, அவரை தடுத்து விஜயேந்திராவிடமிருந்து பூங்கொத்தை பெற்றுக் கொள்வதாகக் கூறினார். அப்போதிலிருந்தே விஜயேந்திராவுக்கு கட்சியில் பெரிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று ஊகங்கள் எழுந்தன.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்து செல்வாக்கு இழந்து நிற்பதால் கட்சியை நடத்திச் செல்வது என்பது புதிய மாநில தலைவரான விஜயேந்திராவுக்கு எளிதான காரியமாக இருக்காது. வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை கரையேற்ற வேண்டுமானால் எடியூரப்பா ஜூனியர் (விஜேய்ந்திரா) கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

எடியூரப்பாவின் நிழலிலிருந்து பா.ஜ.க.வை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று மாநில பா.ஜ.க. தலைவர்கள் பலரும் கருதுகின்றனர். அந்த பட்டியலில் இப்போது யத்னால் தொகுதி எம்.எல்.ஏ. பசனகெளடா பாட்டீலும் இடம்பெற்றுள்ளார். அவர் வெளிப்படையாகவே எடியூரப்பாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷுக்கும் எடியூரப்பாவுக்கும் இடையிலான மோதல் அனைவரும் அறிந்தது.  

2023 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது விஜயேந்திரா, ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுவதை கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவரான சி.டி.ரவி கடுமையாக எதிர்த்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.

கர்நாடகத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்துள்ள நிலையில், எடியூரப்பா எதிர்ப்பாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் அவரது மகனான விஜயேந்திரா, கட்சியை எப்படி முன்நகர்த்திச் செல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com