நிலவை நோக்கி விண்ணில் செலுத்தப்பட்ட ரஷ்யாவின் லூனா 25 விண்கலம், நிலவில் மோதி நொறுங்கியதாக அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோமாஸ் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது. நிலவில் தரையிறங்கும் சமயத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மென்மையான தரையிறக்கம் மேற்கொள்ள முடியவில்லை என ரஷ்ய நாட்டு விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோமாஸ் அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு அனுப்பப்பட்ட ரஷ்ய விண்கலமான லூனா 25, ஆகஸ்ட் பதினொன்றாம் தேதி ரஷ்ய நாட்டின் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. கடந்த புதன்கிழமையன்று நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கி அங்கேயே ஓராண்டு காலம் ஆய்வு மேற்கொள்வதற்காக ரஷ்யவால் அனுப்பப்பட்டது. நிலவின் தென் துருவத்தில் உள்ள மண் மாதிரிகளை சேகரித்து, ஆய்வு செய்யவும் லூனா 25 தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த முயற்சி தற்போது தோல்வியில் முடிந்துள்ளது. ஏற்கனவே லூனா 25ல் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் விண்வெளியில் இருந்து சந்திரனை படமெடுத்து அனுப்பியது.
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக விண்வெளி பயணங்களில் ரஷ்யாவுக்கு ஒத்துழைக்க மாட்டோம் என ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி அறிவித்தது. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐரோப்பாவின் ஆதரவு இல்லாவிட்டாலும் தனது சொந்த திட்டத்துடன் நிலவின் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என ரஷ்யா கூறியது. இதைத்தொடர்ந்து அனுப்பப்பட்ட லூனா 25 விண்கலத்தின் வெற்றி வாய்ப்பு 70% தான் இருக்கும் என ஏற்கனவே ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் யூரி போரிசோவ் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த விண்கலம் நேற்று தரையிறங்கும் சமயத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த நிகழ்வு சந்திரயான் 2 திட்டத்தை நமக்கு நினைவுபடுத்துவதுபோல் உள்ளது. ஆனால் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இது ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவில் மென்மையாகத் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.