கருணாநிதி படித்த பள்ளியில் காலை உணவுத் திட்டம்: முதலமைச்சர் தொடங்கிவைத்தார்!

காலை உணவு திட்டம்
காலை உணவு திட்டம்

ந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு விரிவுப்படுத்தும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  அரசு பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும்  17 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கும் விதமாக இன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,''வாழ்விலோர் பொன்னாள்' என்று சொல்கின்ற வகையில், இந்த நாள் சிறப்பாக அமைந்திருக்கிறது.

அதைவிடச் சிறப்பு என்னவென்றால்? இந்த இடம்! இந்த ஊர்! இந்த திருக்குவளை மண்ணில் உதித்த ஒரு சூரியன், தமிழ்நாடு முழுமைக்கும் ஒளி வீசியது. ஏன், இந்தியாவோட தலைநகர் வரை அதனுடைய வெளிச்சம் பரவியது. அந்த சூரியனுடைய பேர்தான், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட பெருமைக்குரிய நம் தமிழினத் தலைவர் கலைஞர் படித்த தொடக்கப் பள்ளியில் இப்படி ஒரு சிறப்பான திட்டத்தை விரிவாக்கம் செய்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.

அடுத்த மாதம் இன்னொரு கூடுதல் மகிழ்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. உங்களுக்குத் தெரியும். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15. அன்றைக்கு, குடும்பதலைவிக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ தொடங்க போகிறோம். அது என்னுடைய மகிழ்ச்சியை இன்னும் அதிகமாக்க போகின்றது!

17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் திட்டம்

இப்படி மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகின்ற திராவிட மாடல் அரசினுடைய திட்டங்களில் முக்கியமான ஒன்றுதான் இந்த காலை உணவுத் திட்டம்!

கடந்த ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில், மதுரை ஆதிமூலம் மாநகராட்சித் தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தேன். மாணவச் செல்வங்களுக்கு காலை உணவு பரிமாறினேன். அவர்களோடு உட்கார்ந்து உணவு சாப்பிட்டேன். இப்போதும் இங்கே தொடங்கிய திருக்குவளைப் பள்ளியில், கலைஞர் படித்த பள்ளியில் தொடங்கியபோது, அவர்களோடு உட்கார்ந்து சாப்பிட்டுதான் வந்திருக்கிறேன். 1லட்சத்து 14 ஆயிரம் பிள்ளைகளுக்கு காலை உணவு தரப்பட்டது. அதை மேலும் விரிவுபடுத்தும் நம் எண்ணம் தான் இன்றைக்கு செயல்வடிவமாகி,
17 லட்சம் பிள்ளைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

இந்தியா விடுதலை அடைகின்ற சில மாதங்களுக்கு முன்னால், நிதி நெருக்கடியை காரணம் காட்டி மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டது.1955-ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருந்தப்போது மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது பொதுக்கல்வி இயக்குநராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள். அவர்தான் இதற்கான முழு முயற்சியையும் எடுத்தவர். சில அதிகாரிகளுடைய கடுமையான எதிர்ப்பையும் மீறி அதை செயல்படுத்திக் காட்டியவர். யார் என்று கேட்டீர்கள் என்றால், பெரியாரின் பெருந்தொண்டராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள்.

இப்படிப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை தி.மு.க. அரசு தொடர்ந்து நடத்தியது. இதை செழுமைப்படுத்துகின்ற வகையில் கூடுதலாக ஊட்டச்சத்து திட்டத்தை 1971-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கையில் எடுத்தார்.

1975-ஆம் ஆண்டு முழுமையாக மாநில அரசினுடைய நிதியில் ’ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தை’ முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மாநிலம் முழுவதும் நடத்திக் காட்டினார். இதை மேலும் விரிவுபடுத்தினார், யார்? மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள். அதிகப்படியான மையங்களை உருவாக்கி, சத்துணவுத் திட்டத்திற்கு கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்தவர், யார் என்று கேட்டால், முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். எம்.ஜி.ஆருக்கு பிறகு மீண்டும் 1989-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் கலைஞர் சத்தான முட்டையை வழங்கினார்.

அது படிப்படியாக உயர்த்தப்பட்டு, வாரம் ஐந்து நாட்களும் முட்டை வழங்கினார் முதலமைச்சர் கலைஞர். முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழமும் கொடுத்தார். பின்பு கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு, வேகவைத்த உருளைக்கிழங்கு ஆகியவற்றையும் வழங்கினார். முக்கியமான தலைவர்களுடைய  பிறந்தநாளன்று, அப்போது இனிப்பு பொங்கல் வழங்கவும் உத்தரவிட்டவர்தான் கலைஞர் அவர்கள்.

அதற்கு பின்பு முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள், தன்னோட ஆட்சிக்காலத்தில் கலவை சாதம் வழங்க உத்தரவிட்டார்கள்.1921-ல் நீதிக்கட்சி ஆட்சித் தொடங்கி, 2021 வரைக்கும் இருந்ததெல்லாம் மதிய உணவுத் திட்டங்கள்தான்.

காலை உணவு தொடங்கப்பட்டதன் பின்னனி

இந்த நிலையில்தான், சென்னை அசோக் நகரில் இருக்கக்கூடிய பெண்கள் மேனிலைப் பள்ளிக்கு ஒரு விழாவிற்காக நான் சென்றேன். அங்கு படிக்கின்ற மாணவியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். பேசிக் கொண்டு இருக்கும்போது “காலையில் என்ன சாப்பிட்டீங்க?” என்று கேட்டேன். பெரும்பாலானவர்கள் என்ன சொன்னார்கள் என்றால் நாங்கள், “சாப்பிடவில்லை” என்று சொன்னார்கள். “எங்கள் வீட்டில் சமையல் செய்யவில்லை” என்று ஒரு மாணவி சொன்னார்.

“மதியானம் ஸ்கூலில் சென்று சாப்பிடு என்று அம்மா சொல்லிட்டாங்க” என்று இன்னொரு மாணவி சொன்னார். “காலையில் டீ மட்டும் குடித்துவிட்டு வந்திருக்கிறேன்” என்று இன்னொரு மாணவி சொன்னார். இதையெல்லாம் மனதில் வைத்துதான் இந்த காலை உணவுத் திட்டம் உருவாக்கவேண்டும் என்று நான் அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன்.

பசியுடன் பள்ளிக்கு வருகின்றவர்களை பட்டினியாக வைத்து, பாடம் சொல்லித் தரக் கூடாது என்று நினைத்தேன். அதனுடைய விளைவுதான், இன்றைக்கு, 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற, 17 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

 நம்முடைய எதிர்கால நம்பிக்கைகளான பள்ளிக் குழந்தைகளுக்கான திட்டத்திற்குரிய தொகையை, நிதி ஒதுக்கீடு என்று சொல்வதைவிட, நிதி முதலீடு என்றே நான் சொல்ல விரும்புகிறேன்.

இந்தியாவிலேயே புதுப்புது திட்டங்களைக் கொண்டு வந்து, முன்னோடி மாநிலமாக இருப்பதில் நம்பர் ஒன் மாநிலம்- நம்முடைய தமிழ்நாடுதான்.

‘காலை உணவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?

ஒன்று, மாணவர்கள் பசியில்லாமல் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும்.

இரண்டு, ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமல் அந்தக் குழந்தைகள் இருக்க வேண்டும்.

மூன்று, இரத்த சோகை என்ற குறைபாட்டை நீக்கவேண்டும்.

நான்கு, மாணவர்களுடைய வருகை பதிவை அதிகரிக்க வேண்டும்.

ஐந்து, வேலைக்குப் செல்கின்ற தாய்மார்களோட பணிச்சுமைய குறைக்க வேண்டும்.

இந்த ஐந்து நோக்கத்தை படிப்படியாக நிறைவேற்றவேண்டும் என்பதுதான் நம்முடைய இலட்சியம். முழுமையாக அடைந்தே தீருவோம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

கடந்த ஓராண்டு காலத்தில் சுமார் 10 இலட்சம் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதில், சுமார் 92 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுடன் இருப்பதாக கண்டறியப்பட்டு, அந்தக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த சிறப்பு உணவுப்பொருட்கள் கொடுத்ததால், சுமார் 62 ஆயிரம் குழந்தைகள் தங்களது ஊட்டச்சத்து நிலையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்கள்.

நீட்-என்ற தடுப்புச் சுவர்

அந்த காலத்தில அரசர் குலத்தவர் மட்டுமே கற்றுக் கொள்ளலாம் என்று இருந்த, வில் வித்தையை வேடர் குலத்தைச் சேர்ந்த ஏகலைவன் கற்றுக்கொண்டதை பார்த்து கட்டைவிரலை காணிக்கையாக கேட்கின்ற துரோணாச்சாரியார் போன்ற ஆசிரியர்கள்தான் இருந்தார்கள்.

சமூகநீதி நிலைநாட்டப்படுகின்ற இந்தக் காலத்தில் யாராவது கட்டை விரலை காணிக்கையாக கேட்டால், அவர்களுடைய, பட்டை உரியும் என்று எச்சரித்தவர் இந்த மண்ணின் மைந்தர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.பெரியார்-அண்ணா-கலைஞர் வகுத்த சமூக நீதிப் பாதையில் அனைத்து அறிவையும் அனைத்து சமூகத்தவருக்கும் தருகின்ற ஆட்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்தச் சூழலிலும் தேசியக் கல்விக் கொள்கை என்கின்ற பெயரில், நீட்-என்ற பெயரில் தடுப்புச் சுவர் போடுகின்ற `துரோக ஆச்சாரியார்களும்’ இருக்கத்தான் செய்கிறார்கள். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும். ’எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்’ என்ற திராவிடவியல் கோட்பாடு கோலோச்சும் காலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com