
புற்று நோயை எதிர்த்து போராடக்கூடிய ஊசி மூலம் செலுத்தக்கூடிய மருந்தை கண்டுபிடித்து சாதனைப்படைத்துள்ளனர் இங்கிலாந்து நாட்டைச் விஞ்ஞானிகள்.
உலகை அச்சுறுத்தும் மிகக் கொடிய நோய்களில் புற்றுநோயும் ஒன்று. புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான உரிய நோய் தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு உயரத் தொடங்கியது.
இந்த நிலையில் அறிவியல் வளர்ச்சியின் முன்னேற்றத்தின் அடிப்படையில் உலகின் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் புற்று நோய்க்கு எதிரான மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து தேசிய சுகாதார அமைப்பு நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு புற்றுநோயை எதிர்கொள்ளும் ஊசி மருந்தை தயாரித்து சாதனை படைத்திருக்கிறது.
இதுகுறித்து இங்கிலாந்து தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள செய்தி குறிப்பில், நுரையீரல், மார்பகம், கல்லீரல், சிறுநீர்ப்பை ஆகியவற்றில் ஏற்படும் புற்று நோய்களை எதிர்கொள்வதற்காக ஜெனென்டெக்ரோச் நிறுவனம் அடிஸோலிசூமாப் (atezolizumab) என்ற புற்று நோயை எதிர்கொள்ளும் ஊசியை கண்டுபிடித்து இருக்கிறது.
இந்த ஊசி மருந்து புற்றுநோயை எதிர்த்து போராடக்கூடிய தன்மை கொண்டது. நேரடியாக நரம்பில் செலுத்திக் கொள்வதன் மூலம் புற்றுநோய் செல்களை தேடி அழிக்க இந்த மருந்து உதவும். இதன் மூலம் புற்று நோய்க்கு எடுத்துக் கொள்ளும் சிகிச்சை கால அளவு மூன்றில் ஒரு பங்காக குறையும். இதன் மூலம் விரைவாக நோயாளிகள் பயனடைய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த மருந்திற்கான அங்கீகாரம் கேட்டு தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பித்திருக்கிறோம். உரிய அங்கீகாரம் கிடைத்த பிறகு இந்த மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.