ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கூறி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டுத் தெரிவித்தார். ஜி20 நாடுகளை ஒன்றுபடுத்தி முக்கிய முடிவுகளை எடுப்பதில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க தமது ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளிக்கிழமை புதுதில்லி வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பைடன், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இருவரும் இருதரப்பு விவகாரங்களை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் நிலையான வளர்ச்சி, பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கிய விவகாரங்களில் சர்வதேச அளவில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துதல், பொதுவான சவால்களை சமாளித்தல் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் இந்தியா நடத்தும் குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டிற்கு பைடனை வரவேற்க ஆர்வமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குவாட் அமைப்புக்கு தனது ஆதரவை பைடன் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
வர்த்தகத் தொடர்பு மற்றும் கடல் வழி போக்குவரத்துக்கான இந்திய-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சி திட்டத்துக்கு இணைதலைமை ஏற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது.
உலகளாவிய நிர்வாகமானது அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், பிரதிநித்துவம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை பகிர்ந்து கொண்ட அமெரிக்க அதிபர் பைடன், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதற்கான அமெரிக்காவின் ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தினார். 2028-29 இல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர் அல்லாத போட்டியாளராக இருப்பதை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பலதரப்பு உறவை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இருதலைவர்களும் வலியுறுத்தினர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரம் அல்லாத உறுப்பினர்கள் விரிவாக்கம் மற்றும் ஐ.நா. சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
முன்னதாக இந்தியா-அமெரிக்கா இடையிலான நெருக்கமான நட்புறவு மற்றும் கூட்டாண்மையை உறுதிப்படுத்திய பிரதமர் மோடி, இருநாட்டு உறவிலும் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புவதாக குறிப்பிட்டார். கடந்த மாதம் வாஷிங்டனுக்கு சென்றுவந்த வரலாற்று நிகழ்வையும் பிரதமர் மோடி கூட்டறிக்கையில் நினைவுகூர்ந்தார்.
நம்பிக்கை மற்றும் பரஸ்பரம் புரிந்துணர்வு அடிப்படையில் இருநாட்டு அரசுகளும் அனைத்து துறைகளிலும் கூட்டுறவை பலப்படுத்த இருநாட்டு தலைவர்களும் அழைப்புவிடுத்தனர்.
சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், பன்முகத்தன்மை மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் சம்மான வாய்ப்பு ஆகியவைதான் இருநாடுகளின் வெற்றிக்கும் முக்கியமானவை என்று குறிப்பிட்ட தலைவர்கள், இதன் மூலம் உறவுகள் மேலும் பலப்படும் என்று தெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.