பா.ஜ.க. யாத்திரையை புறக்கணித்த வசுந்த ராஜே சிந்தியா!

வசுந்தரா ராஜே சிந்தியா
வசுந்தரா ராஜே சிந்தியா

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான வசுந்தரா ராஜே சிந்தியா, ராஜஸ்தான் மாநிலத்தில் தனது தொகுதியை உள்ளடக்கிய கோட்டா, பண்டி, ஜலாவர் ஹடோதி பகுதிகளுக்கு கட்சியின் பரிவரத்தன் யாத்திரை வந்தபோது அதில் பங்கேற்காமல் புறக்கணித்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த 33 ஆண்டுகளாக அவர் எம்.பி.யாகவும் எம்.எல்.ஏ.யாகவும் பிரதிநித்துவபடுத்திய ஜலாவர் தொகுதிக்கு பரிவர்த்தன் யாத்திரை வந்தபோதும், கோட்டாவில் யாத்திரை முடிந்த நிகழ்விலும் அவர் பங்கேற்காதது அவரது எதிர்காலம் குறித்து ஊகங்களைத் தூண்டியுள்ளது.

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் தாமி மற்றும் அவரது மகன் துஷ்யந்த் சிங் ஆகியோர் கலந்துகொண்ட பேரணியில் வசுந்தரா கலந்துகொள்ளாதது தெளிவாகத் தெரிந்தது. வசுந்தராவுக்கு அந்த தொகுதியில் மிகுந்த செல்வாக்கு இருந்த போதிலும் பேரணியில் ஒருசிலரே பங்கேற்றிருந்தனர்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் விஸ்வ சர்மா உள்ளிட்ட இதர பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள் பேரணியில் பங்கேற்ற போதிலும் வசுந்தரா கலந்துகொள்ளாதது பெரும் ஏமாற்றமாகவே இருந்தது. சில தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான வசுந்தரா அன்றைய தினம் புதுதில்லி வந்திருந்ததாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

மூத்த தலைவர் வசுந்தரா ராஜே பங்கேற்காதது குறித்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் விஸ்வ சர்மாவிடம் கேள்வி எழுப்பியபோது, அந்த கேள்விக்கு பதில் அளிப்பதை அவர் தவிர்த்தார். “பாரத் மாதா கீ ஜெய்” என்று சொல்லும்போது நாம் அனைவரும் ஒன்றுதான். அந்த வகையில் நாங்கள் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்றார் அவர்.

பா.ஜ.க.வின் பரிவர்த்தன் யாத்திரையில் வசுந்தரா ராஜே  பங்கேற்காததற்கு கட்சியுடன் மோதலோ அல்லது முதல்வர் வேட்பாளராக அவரது பெயரை அறிவிக்காததோ காரணமல்ல என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் விகாஸ் பர்ஹத் தெரிவித்தார். ஒருவேளை அவர் தில்லி சென்ற நிலையில், கட்சியின் மேலிடத் தலைவர்களை சந்திக்க சென்றிருக்கலாம் என்றார்.

வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர்களான கோட்டா வடக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பிரஹலாத் குன்ஜல் மற்றும் மூன்றுமுறை ரஜாவத் தொகுதி எம்.எல்.ஏ.வான பவானி சிங் ரஜாவத்  இருவரும் கோட்டாவுக்கு பரிவர்த்தனை யாத்திரை நுழைந்தபோது அதை முன்னின்று வரவேற்றனர். ஆனால், இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை.

பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் விஸ்வ சர்மா உரையாற்றினார். முன்னாள் அமைச்சர் பிபுலாய் சைனி, கல்பனா ராஜே மற்றும் உள்ளூர் பா.ஜ.க. எம்.எல்.க்கள் மட்டும் இதில் பங்கேற்றனர். பா.ஜ.க.வின் கோட்டையான கோட்டாவில் நடந்த பரிவர்த்தன் யாத்திரையில் தலைவர்கள் சிலர் பங்கேற்காதது பா.ஜ.க.வில் உட்கட்சிப் பூசல் இருப்பதையே காட்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com