விஜய் மக்கள் இயக்கத்தினுடைய ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு தரம் தாழ்ந்த, ஆபாச பதிவுகள் கூடாது என்று அறிவுறுத்தினார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆயத்த பணியை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றார். இந்த நிலையில் இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியது, விஜய் மக்கள் இயக்கத்தில் பல்வேறு அணிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஐடி விங் என்பது மிகவும் முக்கியமான அணியாகும். 31 ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் இயக்கமாக பரிமாற்றம் கண்டது. இனி வரும் காலங்களில் வேறு வகையான பரிமாற்றத்தை எடுக்க உள்ளது. அதற்கு நிர்வாகிகள் அனைவரும் தயாராக வேண்டும்.
விஜய் மக்கள் இயக்கத்தில் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, வர்த்தக அணி, விவசாய அணி என்று செயல்படும் அனைத்து அணிகளும் பலமாக இருக்கிறது. மேலும் மக்களுக்கான நல்லதை இந்த அணிகள் செய்து வருகின்றன. இந்த நிலையில் தான் நாம் வேறு பரிமாற்றத்தை அடைய இருக்கின்றோம். இதனால் மக்கள் மத்தியில் கூடுதல் பலம் பெற வேண்டும்.
மூன்று லட்சம் பேர் சமூக வலைதளங்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நல்ல கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வருங்காலத்தில் தொகுதிக்கு 30,000 நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
மேலும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இளைஞர்களுடைய தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மெரினாவில் மாணவர்களை, இளைஞர்களை அணிதிரட்டியதில் சமூக ஊடகத்திற்கு பெரிய பங்கு இருக்கிறது.
சமூக ஊடகங்கள் மக்கள் மத்தியில் அதிகம் செல்வாக்கு செலுத்துகிறது. விஜய் மக்கள் இயக்கத்தில் தற்போது 1600 வாட்ஸ் அப் குழுக்கள் உள்ளன. அவற்றில் மூன்று லட்சம் பேர் செயலாற்றி வருகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு உடனடியாக கருத்துக்கள் சென்றடைய வழியை ஏற்பட்டிருக்கிறது. மேலும் ஐடி விங் வலுப்படுத்த வேண்டியது அவசியம்.
நம்முடைய பதிவுகள் மில்லியன் கணக்கில் லைக்குகளையும், சேர்களையும் சென்றடைய வேண்டும். அதே நேரம் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் கருத்துக்களில் கவனம் தேவை. கருத்தியல் ரீதியான பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். தரம் தாழ்ந்த, ஆபாச வார்த்தைகள், வன்முறைகளை தூண்டும் பதிவுகளை பதிவு செய்யக்கூடாது என்றார்.