
நேற்று ஆகஸ்ட் 23, புதன்கிழமை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்த சந்திரயான் 3-ன் லாண்டர் மற்றும் ரோவர், 14 நாட்கள் நிலவில் ஆய்வை முடித்ததும், பூமிக்கு திரும்பி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் நேற்று வெற்றிகரமாக நிலவில் இறங்கியது. இதற்கு முன்னர் நிலவில் தரையிறங்கிய சீனா ரஷ்ய அமெரிக்கா போன்ற நாடுகள் நிலவின் மத்திய பகுதியிலேயே தரையிறங்கிய நிலையில், சூரிய வெளிச்சம் கூட இல்லாத தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. இது ஒரு மிகப்பெரிய வரலாற்று சாதனையாகும்.
நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட பிரக்கியன் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆங்காங்கே சுற்றி திரிந்து, ஆராய்ச்சிக்குண்டான படங்களை எடுத்து அனுப்பும். இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் மண் இருக்கிறதா? தண்ணீர் இருக்கிறதா? அந்த நீரில் ஆக்ஸிஜன் உள்ளதா? என்பது போன்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். தற்போது நிலவில் சூரிய ஒளி படும் நேரமாகும். அதாவது அடுத்த 14 நாட்களுக்கு நிலவில் சூரிய ஒளி இருக்கும். மீதி 14 நாட்கள் நிலவு இருளில் மூழ்கி விடும். சரியாக வெளிச்சம் படும் நேரத்திலேயே ரோவர் நிலவில் இறங்கியுள்ளது. இது சரியாக 14 நாட்கள் நிலவில் சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.
இந்த 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான சார்ஜ், லேண்ட்ர் மற்றும் ரோவரில் இருக்கும். 14 நாட்கள் கழித்து நிலவில் இருள் படர்ந்த பிறகு ரோவர் ஸ்லீப் மோடுக்கு சென்று விடும். அதன் பிறகு மீண்டும் சூரிய ஒளி படும்போது, அதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பேட்டரி மூலம் மீண்டும் இயங்கி புகைப்படங்களை அனுப்பும் வகையில் விஞ்ஞானிகள் அதை வடிவமைத்துள்ளனர்.
இந்த 14 நாட்கள் ஆய்விலேயே நிலவு சார்ந்த பல விஷயங்களை நம்மால் கண்டுபிடித்து விட முடியும். இருப்பினும் 14 நாட்கள் கழித்து ஸ்லிப் மோடுக்கு போய் மீண்டும் ரோவர் செயல்பட்டால் அதுவும் ஒரு சாதனையாக பார்க்கப்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.