மனித இனம் தோன்றியது எங்கு தோன்றியது ஆப்பிரிக்காவா ஐரோப்பாவா?
நமது மனித இனம் எப்படி தோன்றியது என்றால், பெரும்பாலானவர்கள் குரங்கிலிருந்து வந்தோம் என சொல்வார்கள், ஆனால் அறிவியல் ரீதியாக கடந்த இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'ஹோமோ சாப்பியன்' என்ற இனத்தில் இருந்து தோன்றியவன் தான் மனிதன். முதலில் ஹோமோ சாப்பியன் இனம் ஆப்பிரிக்காவில் தோன்றி, படிப்படியாக ஆசியா ஐரோப்பா மற்றும் உலகின் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாக சொல்லப்பட்டது. இது உண்மை என்று நாம் இதுவரை நம்பிக் கொண்டிருந்த நிலையில், அவ்வப்போது கிடைக்கும் புதைப் படிமங்கள் மூலமாக பல உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலில் உசேன் என்ற குகையில் 4 லட்சம் ஆண்டுகளுக்கு வாழ்ந்த மனிதனின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்து பார்த்தபோது, உண்மையிலேயே மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது என்பது உண்மைதானா? என்ற கேள்வி எழும்பியது. இதைத்தொடர்ந்து இப்போது ஒரு மனித குரங்கின் புதைப் படிமம் கிடைத்துள்ளது. அதுவும் இது துருக்கியில் கிடைத்துள்ளது. உலகில் கிடைத்த மிகவும் பழமையான புதைப்படிமம் இதுதான் என்கின்றனர்.
இந்த மனிதக் குரங்கு சுமார் 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக இருக்கும் என்றும், இதுதான் மனித இனத்தின் தொடக்கமாக இருந்திருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதனால் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் மனித இனத்தின் முதல் உயிர் தோன்றியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் இது மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் உருவானது மட்டுமின்றி, ஆப்பிரிக்காவுக்கு பரவுவதற்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கக்கூடும் என்றும், இதற்காக ஏறக்குறைய 5 மில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்கலாம் என்பதற்கான சாத்தியம் இருப்பதாக, இந்த புதைப்படிமங்களை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.
இதனால் மனிதனின் முதல் இனம் ஐரோப்பாவின் கிழக்கு மத்திய கடற்கரை பகுதிகளில் தோன்றியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இருப்பினும் ஆப்பிரிக்காவிலும் பழங்கால மனிதர்களின் புதைப்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால், இந்த இரண்டு கண்டங்களிலும் மனித இனத்தின் தோற்றம் மற்றும் பரிணாமவளர்ச்சி பற்றி மேலும் ஆராய வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.