சந்திரசேகர் ராவ்
சந்திரசேகர் ராவ்

தெலங்கானா:தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே வேட்பாளர்களை அறிவித்தார் கே.சி.ஆர்.

தெலங்கானா மாநிலத்துக்கு இன்னும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாத நிலையில் முதல்வர் சந்திரசேகர ராவ், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துளார். தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்களில் 7 பேரைத் தவிர மற்ற அனைவரது பெயரையும் அவர் வெளியிட்டுள்ளார். இது அவர் எம்.எல்.ஏ.க்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

மாநிலச் சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 119 இடங்களில் 115 இடங்களுக்கு ஆளும் பாரத ராஷ்ட்ர சமிதி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்களில் 7 பேர் மட்டும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

நாங்கள் இந்த முறை தேர்தலில் 95 முதல் 105 இடங்களில் வெற்றிபெறுவோம் என்று எதிர்பார்க்கிறோம். எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் மட்டுமல்ல, மக்களவைத் தேர்தலிலும் நாங்கள் அமோக வெற்றிபெறுவோம். மக்களவைத் தேர்தலில் 17 இடங்களை கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம். நாங்களும் எம்.ஐ.எம். கட்சியும் நட்புகட்சிகள் என்று ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

2018 தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து போலவே இப்போதும் வெற்றிபெற்று ஆட்சியமைப்போம். சில தனிப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும், கே.சி.ஆர்.-க்காக மக்கள் வாக்களிப்பார்கள். மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் எங்கள் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று கட்சியின் மூத்த தலைவர் வினோத் தெரிவித்தார்.

மாநிலத்தின் வளர்ச்சியால் தனிநபர் வருமானம் உயர வழிவகுத்துள்ளது. நலத்திட்டங்கள் முக்கிய துறைகளை உள்ளடக்கியது. விவசாயிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலத்திட்டங்கள், முதியோர், விதவைகள், ஊனமுற்றோருக்கான உதவிகள் உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன.

பா.ஜ.க.விடமிருந்து மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியிடமிருந்தும் போட்டிக்கான சாத்தியகூறுகள் இருந்தும் அவற்றையும் மீறி வெல்லும் அளவுக்கு சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறோம்.தெலங்கானா ஒன்றும் கர்நாடகம் அல்ல. சித்தராமையா அரசு தடுமாற்றத்தில் இருக்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது என்றார் முதல்வர் சந்திரசேகர ராவ்.

 தேர்தல் அறிவுப்புக்கு முன்னரே வேட்பாளர்களை பாரத் ராஷ்டிர சமிதி அறிவித்துள்ள போதிலும், முதல்வர் சந்திரசேர ராவ், இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது அவரது பதற்றத்தையே காட்டுகிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com