
நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இது குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற அலுவலகம், சிறப்பு கூட்டம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
இந்திய ஜனநாயகத்தினுடைய முக்கிய அடையாளங்களில் ஒன்று நாடாளுமன்றம். நாடாளுமன்றத்தில் எழுப்பக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் பதிவு செய்யப்படும், அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. மேலும் நாட்டினுடைய முடிவுகள், திட்டங்கள், செயல்பாடுகள் என்று அனைத்தையும் திட்டமிடுவதற்கும், ஒப்புதல் வழங்குவதற்கும் நாடாளுமன்றமே பிரதானம்.
இந்த நிலையில் தற்போது ஆட்சி பொறுப்பில் உள்ள பாரதிய ஜனதா அரசு புதிய நாடாளுமன்றத்தை கட்டி முடித்துள்ளது. அதே சமயம் சமீபத்தில் முடிந்த மழை கால கூட்டத்தொடர்க்கு முன்பாகவே புதிய நாடாளுமன்ற வளாகம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் மழைக்கால கூட்டத்தொடரில் பயன்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது புதிய நாடாளுமன்ற வளாகத்தில் செப்டம்பர் 18ஆம் தேதி சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று பாரதிய ஜனதா அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் எதிர்க்கட்சிகள் இந்த சிறப்பு கூட்டத்தொடர் இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான கூட்டமா, தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கான குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்கான கூட்டமா என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற அலுவலகம் சிறப்பு கூட்டத் தொடர் குறித்த அரசிதழை வெளியிட்டுள்ளது. இதில் சிறப்புக் கூட்டம் 75 ஆண்டுகால இந்திய நாடாளுமன்ற வரலாறுகளை, அனுபவங்களை பதிவு செய்வதற்காக கூட்டமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கூட்டத் தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அனுபவங்களை பகிரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், சி ஐ ஜே அறிக்கை உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.