மகளிர் மசோதா முழுமையாக இல்லை:ராகுல்காந்தி பேச்சு!

மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா
Rahul Gandhi
Rahul Gandhi

களிர் இடஒதுக்கீடு மசோதா முழுமையற்றது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்தார். நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடுக்கு வகை செய்யும் மகளிர் மசோதா மீது மக்களவையில் விவாதம் நடைபெற்றது. 

அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் தலைவர்கள் மகளிர் மசோதாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் தொகுதி வரையரை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னர் இந்த மசோதா 2029 இல்தான் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சித் தலைவர்களும் இதேபோல கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து பேசிய ராகுல்காந்தி,”மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறேன். ஆதரிக்கிறேன். இது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். பல்வேறு துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்களாக இருக்கிறார்கள். ஆனால், ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இந்த மசோதா முழுமையற்றதாக உள்ளது. இந்த மசோதாவில் இதர பிறபடுத்தப்பட்ட வகுப்பு பெண்கள் மற்றும் இஸ்லாமிய பெண்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இது பெரும்பாலான மகளிர்க்கு உதவுபடியாக இருக்கும்.

சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும் என்ற சோனியா காந்தியின் கோரிக்கையை தாம் ஆதரிப்பதாகவும் ராகுல் குறிப்பிட்டார். இந்தியா எதிர்க்கட்சிக் கூட்டணி இந்த கோரிக்கையை ஏற்கெனவே முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசில் 90 செயலாளர்கள் இருக்கிறார்கள் இவர்களில் எத்தனைப் பேர் ஓ.பி.சி. (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரியுமா? என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, அதற்கான விடையையும் அளித்தார். விடையைக் கேட்டால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். அதாவது 90 செயலர்களில் மூன்று பேர்தான் ஓ.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் ஓ.பி.சி.க்கள், பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள், ஆதிவாசிகள் பற்றிய உண்மை நிலவரம் தெரியவரும் என்றும் அவர் கூறினார். முதலில் இந்த மசோதாவை நிறைவேற்றுங்கள். சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துங்கள். நீங்கள் உடனடியாக இதைச் செய்யாவிட்டால், நாங்கள் அதைச் செய்வோம் என்றார்.

காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது உள்ளாட்சித் தேர்தலில் சட்டத்திருத்தத்தின் மூலம் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவந்ததை அவர் சுட்டிக்காட்டினார். அது ஒரு முக்கியமான நடவடிக்கை. அதைப் போலவே 33 சதவீத இடஒதுக்கீடும் முக்கிய நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முன்முயற்சி மேற்கொண்டது தமது கணவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்திதான் என்று சோனியா காந்தி, தமது பேச்சில் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், தொகுதிகள் புதிதாக வரையறுக்கப்பட வேண்டும், தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதில்தான் அவர்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது. தற்போதைய சூழலில் 2027 ஆம் ஆண்டுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிகிறது.

புதிய நாடாளுமன்றத்தை அழகுற கட்டியிருப்பதாக பெருமையடித்துக் கொள்ளும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் தலைவரான குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை அழைக்காதது ஏன் என்று ராகுல் கேள்வி எழுப்பினார். பெண்களை முதலில் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com