
புதுதில்லியில் இந்த மாதம் 9, 10 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ள ஜி20- நாடுகள் உச்ச மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக சீன பிரதமர் லீ கியாங் தலைமையிலான குழு பங்கேற்கிறது. இதை சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியா-சீனா எல்லைப் பகுதி நடவடிக்கைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வரும் நிலையில் சீனா, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சீன வெளியுற அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய குடியரசின் அழைப்ப ஏற்று இந்திய தலைநகர் புதுதில்லியில் செப். 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி-20 உச்சமாநாட்டில் சீனப் பிரதமர் லீ கியாங் கலந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளார். எனினும் சீன அதிபர் ஜி ஜின்பிங், மாநாட்டில் பங்கேற்காததற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த செப். 2 ஆம் தேதியே சீன அதிகாரிகள், அதிபர் ஜி ஜின்பிங், ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்று கூறியிருந்தனர். ஆனால், இதுவரை எழுத்துப்பூர்வமாக எந்த முறையான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் சீன அதிபருக்கு பதிலாக சீனப் பிரதமர் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுதில்லியில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்காதது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இம்மாதம் 7 ஆம் தேதி புதுதில்லி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாத சூழல் இருப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் புதினுக்கு பதிலாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
ஜி-20 நாடுகள் அமைப்பில் ஆர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷியா, செளதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் தலைவர்கள் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்த ஆண்டு இந்த அமைப்புக்கு பிரதமர் மோடி தலைமையேற்றுள்ளதால் புதுதில்லியில் ஜி-20 உச்சிமாநாடு நடைபெறுகிறது.