பால் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு கறவை மாடுகள்.சேலம் ஆவின் முடிவு!

பால் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு கறவை மாடுகள்.சேலம் ஆவின் முடிவு!

தேவர்களின் உயிர்காக்கும் அமுதமாக பார்க்கப்படுகிறது மாடுகளில் இருந்து கறக்கப்படும்  பால். குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஊட்டச்சத்து பெற அதிகம் பயன்பாட்டில் உள்ள பானம் பால் என்றால் மிகையல்ல. பாலின் உபபொருள்களான  வெண்ணெய், நெய், பால்பவுடர், பனீர், தயிர், மோர், பால்கோவா, போன்றவைகளை விரும்பாதவர் யாருமில்லை.

இந்தப் பாலை நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களின் அரசே மாடுகள் வைத்திருக்கும் பால் உற்பத்தியாளர் களிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனையும் செய்கிறது. தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் பாலை அருந்தியே நம் காலைப்பொழுது துவங்குகிறது பாலின் தேவைகள் அதிகரித்துள்ளது. பாலின் உற்பத்தியைப் பெருக்க சேலம் ஆவின் ரூபாய் 144 கோடியில் பால் வழங்கும் விவசாயிகளுக்கு 48,000 கறவைமாடுகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 30 இடங்களில் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியங்கள் உள்ளன. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து சேகரிக்கப்படும் பாலானது ஆவின் பால் பண்ணைகளால் சுத்திகரிக்கப்பட்டும், பதப்படுத்தப்பட்ட பின்னரும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றுள் தமிழ்நாடு அளவில் பால் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் பால் கொள்முதலில் சேலம் ஆவின் முதல் இடத்தை பெற்றுள்ளது. சேலம் மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியமானது 800 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் கூட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. 2.5 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் 4.80 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தினமும் உள்ளூர் தேவைக்கு 2.10 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது சென்னைக்கு  2 லட்சம் லிட்டர் அனுப்பப்படுகிறது. மீதி உள்ள பாலை பால் பவுடராகவும் நெய் இனிப்பு தயாரிக்கவும்  பயன்படுத்தப்படுகிறது. ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி அதன்  உபபொருட்களான நெய், பால்பவுடர், பன்னீர், வெண்ணெய், பால்கோவா, தயிர், மோர், நறுமண பால்வகைகள் மற்றும் பிஸ்கட் வகைகளையும் விற்பனை செய்து வருகிறது

இதனிடையே சேலம் ஆவினில் பால் கொள்முதலை அதிகரிக்கும் வகையில் பால் வழங்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆவினில் பால் வழங்கும் விவசாயிகளுக்கு கறவை மாடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக தாலுகா வாரியாக விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி சேலம் ஆவினில் 144 கோடியில்  48 ஆயிரம் ஜெர்சி இன கறவை மாடுகள் வழங்கப் படுகிறது. ஒவ்வொரு மாடுகளும் ரூபாய் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான விலையில் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

       இது குறித்து சேலம் ஆவின் அதிகாரிகள் கூறியதாவது, “சேலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் கீழ் செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் இருந்து பால் வழங்கும் விவசாயிகளிடம் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஜெர்சி இன கறவை மாடுகள் வாங்கித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பால் உற்பத்தியாளர்களின் மாதாந்திர தவணைகளை செலுத்துவதற்கான வங்கி உத்தரவாதத்தை ஆவின் வழங்குவதுடன் பணத்தை திருப்பி செலுத்தும் தொகை உற்பத்தியாளர்களின் பால் பில்லில்  சேர்க்கப்பட்டு பால் ஊற்ற ஊற்ற அந்த பணம் மாதா மாதம் கழிக்கப்படும். சேலம். மேட்டூர், இடைப்பாடி, ஆத்தூர் பால் விரிவாக்க அலுவலர்கள் பால்வளத்துறை பதிவாளர் அலுவலக முதுநிலை ஆய்வாளர்கள் கால்நடை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கறவை மாடுகளை வழங்குவதற்கு தகுந்த விவசாயிகளை தேர்வு செய்வார்கள். பால் வழங்கும் உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கு கால்நடை பராமரிப்புடன் கறவை கடன் தலா ரூபாய் 14,000 வீதம் 1.50 லட்சம் வரை கடன் வழங்கப்படவுள்ளதாக கூறினர்'’.

    எப்படியோ இனி பால் உற்பத்தி பெருகி பால் மற்றும் பால்பொருள்களின் தட்டுபாடு குறைந்து பாலின் விலையும் குறைந்தால் நமக்கும் மகிழ்ச்சிதானே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com