வெப்பத்தைத் தணிக்க சிவனுக்கு தாராபிஷேகம்!

வெப்பத்தைத் தணிக்க சிவனுக்கு தாராபிஷேகம்!
Published on

கோடையில் வாடுவதும் குளிரில் நடுங்குவதும் இயற்கையின் மாற்றங்கள். எனினும் அளவுக்கு அதிகமானால் இயற்கையும் வேதனையானதாக மாறுகிறது. கடந்த வருடங்களை விட இந்த வருடம் வெயிலின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. மக்கள் வீட்டுக்குள் முடங்கும் அளவுக்கு வெயிலின் வெப்பம் வாட்டி வதைக்கிறது . இயற்கையின் கட்டுப்பாடுகளை மீறி மனிதர்கள் உருவாக்கும் புதுமைகள் இயற்கையை சீண்டி இது போன்ற பாதிப்புகளை தருகிறது என்பது பகுத்தறிவின் வாதம் என்றாலும் ஆன்மீக ரீதியாக முப்பெரும் கடவுள்களில் ஒருவரான சிவபெருமான் குளிர்ச்சி அடைந்தால் அவரில் அடங்கும் இந்த பூமியும் குளிரும் என்பது பகதர்களின் நம்பிக்கை. இதற்கு முன்னோர் வகுத்து வைத்த நியதிகளை ஆலயங்கள் பின்பற்றுகின்றன. அந்த வகையில் கோடைக் காலங்களில் சிவனுக்கு நடைபெறும் தாராபிஷேகம் முக்கியத்துவம் வாய்ந்தது அது என்ன தாராபிஷேகம்?

       சிவாலயங்களில் கோடை காலங்களில் தாராபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மேல் உறி கட்டி அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலயத்தைத் தொங்கவிடுவார்கள். அந்த கலயத்திற்குள் வெட்டி வேர், விளாமிச்சை வேர்,   பச்சிலை,  ஜடாமஞ்சி, பன்னீர்,  பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்த நீரை நிரப்புவார்கள். அந்த நீரின் துளிகள், கலயத்தின் துளை வழியாக லிங்கத்தில் நாள் முழுவதும் சொட்டு சொட்டாக விழும் வண்ணம் செய்வர். மூலிகைகள் நீர்த்தாரைகளாக விழுந்து சிவனுக்கு குளிர்ச்சி தர உதவும் அந்தப் பாத்திரமே தாராபிஷேகப் பாத்திரம் எனப்படுகிறது.  

     இவ்வாறு ஜலதாரை செய்யப்பட்டு சிவலிங்கம் குளிர்விக்கப்படுவதால் மக்களை கோடை வெப்பத்தில் இருந்து காக்கலாம் என்பது ஆன்மீக நம்பிக்கை. மேலும்  இயற்கை உபாதைகளோ, பூமி அதிர்வோ ஏற்படாது என்பதும் ஐதீகம். அதன்படி ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர நாட்களில் ஏற்படும் வெயில் கொடுமையினை தணிக்க சேலம் உத்தம சோழபுரத்தில் அமைந்துள்ள கரபுரநாதருக்கு தாராபாத்திரத்தில் அபிசேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வழக்கத்தைவிட வெயில் சுட்டெரிப்பதால் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே கரபுரநாதர் கோவில் மூலவர் சிவலிங்கத்தின் மீது தாராபிசேகம் செய்யப்பட்டது. இதற்கு தேவைப்படும் மூலிகைப் பொருள்களை பக்தர்களும் வாங்கிக் கொடுத்தால் வாழ்வில் நன்மை பெருகும் என்பது நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com