ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிபாடு நடத்தினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையை தொடங்கி வைப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தார்.
தொடர்ந்து யாத்திரையை தொடங்கி வைத்த அவர், பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இன்று அதிகாலை ராமேஸ்வரம் ராமநாசுவாமி கோயிலுக்கு வந்த மத்திய அமைச்சருக்கு, கிழக்கு கோபுர வாயிலில் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர், அவர் ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்த அவர், விஸ்வரூப ஆஞ்சநேயர் மற்றும் 21 புண்ணிய தீர்த்தங்களுக்கும் சென்று வழிபட்டார். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சி.டி. ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தனியார் விடுதியில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ள அமித்ஷா, பாஜக நிர்வாகி ஒருவருடைய வீட்டிற்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, அப்துல் கலாமின் அருங்காட்சியகம், விவேகானந்தர் நினைவு இல்லம் ஆகியவற்றுக்கும் செல்ல உள்ளார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் என் மண், என் மக்கள் என்ற பெயரில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொள்கிறார். இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் மோடி என்ன செய்தார் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர் பாதயாத்திரையை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய அமித் ஷா, உலகிலேயே ஊழல் மிகுந்த அரசாக திமுக அரசு இருப்பதாக குற்றஞ்சாட்டினார், தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிப்பதற்காக, அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.