வண்டலூர் பூங்காவில் தினக்கூலி பணியாளர்கள் போராட்டம்.

வண்டலூர் பூங்காவில் தினக்கூலி பணியாளர்கள் போராட்டம்.

சென்னை தாம்பரத்தை அடுத்து வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இயற்கை எழிலோடு 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள இந்த பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்பூங்காவில், 219 பேர் தினக்கூலி ஊழியர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு தினந்தோறும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ளவர்கள், சுற்றுலா பயணிகள், மாணவ மாணவிகள் மட்டும் இல்லாமல் பல வெளியூர்களில் இருந்து பூங்காவுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று பெண்கள் உள்ளிட்ட 219 பேரும் வண்டலூர் பூங்காவுக்கு வழக்கம் போல் பணிக்கு வந்தனர்.

அப்போது அங்கிருந்த பூங்கா அதிகாரிகள் ஊழியர்களிடம், இன்று முதல் இருந்து பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை மூலம் உங்களுடைய வருகை பதிவு செய்யப்பட உள்ளது. எனவே, இனிமேல் அனைவரும் பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்ய வேண்டும். யாராவது பதிவு செய்ய தவறினால் வேலைக்கு வரவில்லை என கருதி சம்பளம் பிடிக்கப்படும்’ என, கூறி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த தினக்கூலி பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து பூங்கா நுழைவு வாயில் அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பூங்கா வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென தினக்கூலி பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பூங்காவில் நாள்தோறும் நடக்கும் துப்புரவு பணிகள், விலங்கு இருப்பிடம் சுத்தம் செய்யும் பணிகள், விலங்குகளுக்கு உணவு வழங்கும் பணிகள், தண்ணீர் விநியோகம் செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டது. 
தினக்கூலி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடும் தகவல் அறிந்து பூங்கா துணை இயக்குனர் காஞ்சனா, உதவி இயக்குனர் மணிகண்டபிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தினக்கூலி பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தினக்கூலி பணியாளர்கள் ‘உடனடியாக பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை ரத்து செய்ய வேண்டும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

 அதற்கு பூங்கா அதிகாரிகள், ‘உங்களது அனைத்து கோரிக்கைகள் குறித்து, தமிழ்நாடு அரசுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யப்படும்’ என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

தினக்கூலி பணியாளர்களின் திடீர் போராட்டம் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு பெரும் பரபரப்பான சூழலும் நிலவியது. 

இதுகுறித்து பூங்கா ஊழியர்கள் சிலர் கூறியதாவது:

வண்டலூர் பூங்காவில் 15 ஆண்டுக்கும் மேலாக எத்தனையோ ஊழியர்கள் தங்களது உழைப்பை கொட்டி வருகின்றனர். இரவு நேரங்களில், 12 மணி நேரம் கண் விழித்து வேலை பார்க்கும் எங்களது பணி நேரத்தை குறைத்து 8 மணி நேரமாக மாற்ற வேண்டும் என, பல்லாண்டு காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இதையெல்லாம் காது கொடுத்து யாருமே கேட்பது இல்லை. குறைந்த ஊதியத்துக்கு கடின உழைப்பை தரும் எங்களை கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் நடத்துகிறார்கள்.

பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவு செய்ய வேண்டும் என்கிறார்கள். மறந்து போனாலும் சம்பளம் கட் ஆகுமாம்? இது என்ன நியாயம்?

இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இவ்வாறு ஊழியர்கள் கூறினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com