
சாதி அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
தில்லி துவாரகா பகுதியில் ஸ்ரீ ராம்லீலா சொசைட்டி ஏற்பாடு செய்த தசரா நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு பேசிய மோடி, ராவணனின் உருவ பொம்மையை எரிப்பது என்பது வெறும் சடங்காக இல்லாமல் சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் தீமைகளை அகற்றும் வகையில் இருக்க வேண்டும். அதாவது சாதி, பிராந்திய அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை அழிக்க வேண்டும் என்றும் கூறினார்.
அயோத்தி ராமர் கோயில் பல நூற்றாண்டுகளின் காத்திருப்புக்குப் பிறகு முடிவடையும் தருவாயில் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். அயோத்தியில் ஸ்ரீ ராமர் சிலை வரும் ஜனவரி 22 இல் பிரதிஷ்டை செய்யப்படும். அடுத்த ஆண்டு தசாரா கொண்டாட்டங்கள் அயோத்தியில் விமரிசையாக நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் வெற்றிகரமான சந்திரப் பயணம், புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா, பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் இயற்றுதல் போன்ற பல நல்ல முன்னேற்றங்களுக்கு மத்தியில் இந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக மோடி கூறினார். "இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், மிகவும் நம்பகமான ஒன்றாகவும் வளர்ந்து வருகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
விஜயதசமி என்பது அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி, ஆணவத்தின் மீது பணிவு, கோபத்தின் மீது பொறுமை ஆகியவற்றின் வெற்றித் திருவிழா... உறுதிமொழிகளை புதுப்பிக்கும் நாள்.
இந்த நன்னாளில் நாம் பத்து உறுதிமொழிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரைச் சேமிப்பது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல், தூய்மையை பராமரித்தல், உள்ளூர் பொருள்களுக்கு குரல் கொடுத்தல், தரமான வேலைகளைச் செய்தல் மற்றும் தரமான தயாரிப்புகளை உருவாக்குதல், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன் இந்தியா முழுவதும் பயணம் செய்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
விவசாயிகளிடையே இயற்கை விவசாயத்தை வலியுறுத்த வேண்டும். சூப்பர் உணவுகளான தானியங்களை உணவில் சேர்க்க வேண்டும், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என்றார். ஒவ்வொருவரும் வளர்ச்சியடைந்தால்தான் இந்தியாவும் வளர்ந்த நாடாக மாறும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் அந்தஸ்தை உயர்த்துவதை 10-வது உறுதிமொழியாக ஏற்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.