கெடு முடிந்து காசாவிலிருந்து 10 லட்சம் பேர் வெளியேறினர்; தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!

கெடு முடிந்து காசாவிலிருந்து 10 லட்சம் பேர் வெளியேறினர்;
தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!
Published on

ங்கள் நிலைகள் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா நகரம் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஹமாஸ் தீவிரவாதிகள் அதிரடியாக இஸ்ரேல் நிலைகள் மீது ஏவுகணை வீசி வான் வழித் தாக்குதல் நடத்தினர். மேலும், எல்லைப் பகுதியில் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இந்தத் தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல், ஹமாஸ் தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை கடத்திச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. குண்டுமழை பொழிந்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 1500 பேர் உயிரிழந்தனர்.

கடந்த பத்து நாட்களாகத் தொடரும் இந்தத் தாக்குதலின் முக்கியகட்டமாக காசா பகுதியிலுள்ள மக்களை 24 மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு இஸ்ரேல் கெடு விதித்தது. இதையடுத்து காசா பகுதியிலிருந்து 10 லட்சம் பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளனர். கெடு முடிந்த நிலையில் காசா பகுதியை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம் மெல்ல மெல்ல முன்னேறி வந்து தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகி வருகிறது.

இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார். ‘ஹமாஸ் எங்களை அழிக்க முயல்கிறது. ஆனால், முடிவில் அழிந்துபோவது ஹமாஸ் தீவிரவாதிகள்தான்’ என்று நேதன்யாகு தெரிவித்தார்.

காசா மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கடந்த 9 நாட்களாக நடத்திய தாக்குதலில் 700 குழந்தைகள் உள்பட 2,670 பேர் பலியாகியுள்ளனர். காசா பகுதியில் குடிநீர், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உணவு கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஹமாஸ் தீவிரவாதக் குழுக்களின் கமாண்டர் யாஹ்யா சின்வரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்.ரிச்சர் ஹெசட் தெரிவித்துள்ளார். எனினும் ஹமாஸ் தீவிரவாதிகளிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்பது இஸ்ரேலுக்கு இன்னமும் சவாலாகவே உள்ளது.

வடக்குப் பகுதியில் லெபனான் தீவிரவாதிகளின் தாக்குதலையும் இஸ்ரேல் சமாளிக்க வேண்டியுள்ளது. ‘ஈரான் ஆதரவுள்ள ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் எங்களைத் தாக்கினால் தக்க பதிலடி கொடுப்போம்’ என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ், போர் பதற்றத்தைத் தணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிணைக்கைதிகளை விடுவிக்குமாறு அவர் ஹமாஸ் தீவிரவாதிகளை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் காசா பகுதியில் நிவாரண உதவிகள் வழங்க வழிவகுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com