தில்லியில் ஸ்கூட்டரில் சென்ற இளம் பெண்ணின் மீது மோதிய ஒரு கார், அந்தப் பெண்ணை 12 .கி.மீ.. தொலைவு இழுத்துச் சென்றது கொடூரமானது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 5 பேருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.
"சமூகம் எங்கு செல்கிறது என்றே தெரியவில்லை. அந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனை நடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. 20 வயதே ஆன அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இந்த சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது. விபத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தாலும், சட்டப்படி கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் என்பதால் தில்லி துணை நிலை ஆளுநர் அவர்களை பாதுகாத்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளர் செளரவ் பரத்வாஜ். துணை நிலை ஆளுநர் சக்ஸேனா பதவி விலக வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்தபோது அந்த சாலை வழியே மூன்று போலீஸ் வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. ஒருவரும் சம்பவத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவில்லை. கடமையை செய்யத் தவறிய போலீஸ் அதிகாரிகள் மீது துணை நிலை ஆளுநர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றவாளிகள் பா.ஜ.க.வினர் என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.
குற்றவாளிகளை கைது செய்து பெயரளவுக்கு வழக்கு பதிவு செய்துள்ளனர். காரில் சென்றவர்கள் இசையை அலறவிட்டு கேட்டுக் கொண்டே சென்றதால் பெண் சிக்கியிருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸாரே சப்பைகட்டு கட்டுகின்றனர். மேலும் காரில் இருந்தவர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர்.
எனவே சரியான முறையில் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.