தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு கொலை மிரட்டல்!

சரத்  பவார்
சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பவாரின் மகளும் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான சுப்ரியா சுலே, பவாரின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு மகாராஷ்டிர அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சுப்ரியா சுலே எம்.பி, செய்தியாளர்களிடம் கூறுகையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு வாட்ஸ் ஆப்பில் கொலை மிரட்டல் வந்துள்ளது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் புகார் கொடுத்துள்ளேன்.

இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பவாருக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு உள்துறை அமைச்சகத்திடம் உள்ளது. இது விஷயத்தில் உள்துறை அமைச்சர் தலையிட வேண்டும்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர். அவருக்கு இப்போது கொலை மிரட்டல் வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சுப்ரியா சுலே.

இது தொடர்பாக மும்பை போலீஸ் தலைமை அதிகாரி விவேக் பான்ஸல்கரை, சுப்ரியா சுலே மற்றும் கட்சியின் மூத்த பிரதிநிதிகள் சந்தித்து புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளதுடன் விசாரண நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

82 வயதான சரத் பவாருக்கு முகநூல் (பேஸ்புக்) மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதை பிரதி எடுத்து போலீஸாரிடம் கட்சியினர் கொடுத்துள்ளனர். அந்த மிரட்டல் செய்தியில் 2013 ஆம் ஆண்டு புனேயில் மக்கள் ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்டார். அதே கதிதான் உங்களுக்கும் ஏற்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதேபோன்று சிவசேனை உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த சஞ்சய் ரெளத் மற்றும் சுநீல் ரெளத் ஆகியோருக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சஞ்சய் ரெளத் மற்றும் எனக்கும் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது என்று எம்.எல்.ஏ. சுநீல் ரெளத் கூறியுள்ளார். இது தொடர்பாக மாநில அரசுக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரில் இந்த வார தொடக்கத்தில் சமூக வலைத்தளங்களில் முகலாய பேரரசர் ஒளரங்கசீப் மற்றும் மைசூரை ஆண்ட திப்புசுல்தான் படங்கள் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. கோல்ஹாபூரில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து சரத் பவார் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மகாராஷ்ரம் அமைதியை விரும்பும் மாநிலமாகும். யாரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு செயல்பட நினைக்க வேண்டாம் என்றும் பவார் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பா.ஜ.க. தலைவர் நிலேஷ் ரானே, சரத் பவாரை குறைகூறி விமர்சித்திருந்தார். அவரை ஒளரங்கசீப் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கோல்ஹாபூரில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக போலீஸார் 36 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோல்ஹாபூர் போலீஸ் கண்காணிப்பாளர் மகேந்திர பண்டிட் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com