
"மனித உயிர் என்பது விலைமதிக்க முடியாதது. அதை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை” என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளார்.
அப்போது அமைச்சரிடம் மழைநீர் வடிகால் பள்ளங்களில் விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர், "தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக பல பணிகள் நடைபெறுகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் என்பது மத்திய அரசின் நிதியிலிருந்து நேரடியாக செய்யப்படும் பணிகள். அதேபோல் மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட சாலைகள் மற்றும் கிராம சாலைகளை தரம் உயர்த்துவது என 4 வகையான பணிகளை தமிழக அரசு செய்துவருகிறது.
சாலைகளில் எந்த பணி செய்வதாக இருந்தாலும், மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்வதாக இருந்தாலும், அது பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறும், அவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளோம். தடுப்புகள் அமைத்து, எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுத்தான் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
எனவே, பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சில நேரங்களில் பொதுமக்களே தடுப்புகளை எல்லாம் தாண்டிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அந்த சமயத்தில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அரசு என்ன செய்ய முடியும்?
பணிகள் நடைபெறுகின்ற எல்லா இடங்களையும் நாங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள்தான் கொண்டுவர முடியுமே தவிர, தடுப்புகளை கடந்து செல்பவர்களை எப்படி பாதுகாக்க முடியும்.
மனித உயிர் என்பது விலைமதிக்க முடியாதது. அதை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்று தமிழக முதல்வரும் கூறியிருக்கிறார். ஆனால், சில நேரங்களில் யாராவது எங்காவது விழுந்துவிட்டால், எங்கே விழுந்தார்கள் என்றே தெரியாமல், நெடுஞ்சாலைத் துறை பள்ளத்தில் விழுந்ததாக இத்துறை மீது பழிபோடுகிறார்கள்.
“இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் நெடுஞ்சாலைத்துறை பணியாற்றும்" என்று அவர் கூறினார்.