டெல்லியில் அதிகரித்த காற்று மாசு.. பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

டெல்லியில் அதிகரித்த காற்று மாசு.. பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!
Published on

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் காரணமாக இரண்டு நாட்கள் பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தலைநகர் டெல்லி சந்தித்து வரும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று காற்று மாசுபாடு. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாய குப்பைகள் டெல்லியை பெரிய அளவில் பாதிக்கின்றன. இதை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று தரக்குறியீடு மோசமடைந்து வருகிறது. தொடர்ந்து 5ஆவது நாளாக காற்று தரக்குறியீடு 346 என மிக மோசமடைந்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தலைமையில் சீராய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்றும், நாளையும் என இரண்டு நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு டெல்லி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், மாசுபாட்டின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதனால் அடுத்த இரண்டு நாட்கள் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே ஆன்லைன் வழி செயல்பாடுகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் பலவும் ஆன்லைன் மூலம் பாடம் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளன. அரசு பள்ளிகள் தங்களிடம் இருக்கும் வசதிகளை கொண்டு டிஜிட்டல் முறையில் பாடம் நடத்த திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சில பள்ளிகள் விடுமுறை அறிவித்து விட்டன.

முக்கியமான விஷயங்களுக்கு வெளியே வருவோர் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காற்றின் தரம் மேம்படுகிறதா? இல்லையா? என்பது குறித்து காற்று தர மேலாண்மை ஆணையம் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது. நிலைமை மேம்பட்டதும் சில தளர்வுகள் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com