டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த IndiGo நிறுவனத்தின் அனைத்து உள்நாட்டு விமானச் சேவைகளும் நள்ளிரவு வரை ரத்து செய்யப்பட்டதால், நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் விமான டிக்கெட் கட்டணம் கட்டுக்கடங்காமல் எகிறியது.
இந்தத் திடீர் முடக்கத்தால், கடைசி நேர விமான இருக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, டிக்கெட் விலைகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளன.
டெல்லி விமான நிலையம் தனது அதிகாரப்பூர்வ 'X' சமூக ஊடகப் பக்கத்தில் இந்தத் தடையை அறிவித்தது.
டிசம்பர் 5 அன்று இரவு 11:59 மணி வரை IndiGo-வின் உள்நாட்டு விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதை உறுதி செய்தது.
மற்ற விமான நிறுவனங்களின் செயல்பாடுகள் வழக்கம் போல் தொடர்கின்றன என்றும், பயணிகள் விமான நிலையத்துக்கு வருவதற்கு முன் தங்களது பயண நிலையைச் சரிபார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
சந்தையில் இதன் தாக்கம் உடனடியாக உணரப்பட்டது.
முக்கிய வழித்தடங்களில் டிக்கெட் கட்டண உயர்வு விவரம்:
டெல்லி - பெங்களூரு: ஏர் இந்தியா: ரூ. 1.02 லட்சம் (உச்சம்)
அகாசா ஏர்: சுமார் ரூ. 39,000
டெல்லி – மும்பை: ஏர் இந்தியா: ரூ. 60,000
சென்னை – டெல்லி: ஸ்பைஸ்ஜெட்: ரூ. 69,000 (உச்சம்) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: ரூ. 41,000
ஹைதராபாத் – டெல்லி: ஏர் இந்தியா: ரூ. 87,000
ஹைதராபாத் – மும்பை: கட்டணம்: ரூ. 76,500
ஹைதராபாத் – பெங்களூரு: கட்டணம்: ரூ. 41,400
திணறிய விமான நிலையங்கள்; தவித்த பயணிகள்
இந்தச் சீர்குலைவு டெல்லியையும் தாண்டியது. தலைநகரில் மட்டும் 220-க்கும் மேற்பட்ட IndiGo விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பெங்களூருவில் 100-க்கும் அதிகமான விமானங்களும், ஹைதராபாத்தில் கிட்டத்தட்ட 90 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இதன் விளைவாக, விமான நிலையங்களில் நீண்ட வரிசைகள், நீட்டிக்கப்பட்ட தாமதங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.
கடந்த சில நாட்களாகவே IndiGo நிறுவனம் தொடர்ந்து விமான ரத்துச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
விமானிகள் ஓய்வுக்கான விதிகள் (FDTL - Flight Duty Time Limitation) விதிமுறைகளை அமல்படுத்தியதால்தான் இந்தச் சிக்கல் ஏற்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதிகள், சோர்வைக் குறைத்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டவை.
ஆனால், புதிய முறைக்குத் தேவையான விமானப் பணியாளர்களின் தேவையைத் தாங்கள் குறைவாக மதிப்பிட்டு விட்டதாக IndiGo ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதமே IndiGo நிறுவனம் 1,200-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை ரத்து செய்திருந்தது.
வியாழன் அன்று மட்டும் நாடு முழுவதும் 500-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் ஏற்பட்டிருக்கும் முடக்கம் சமீபத்திய ஆண்டுகளில் விமான நிறுவனத்தின் மிக மோசமான செயல்பாட்டுச் சரிவுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.